இளம்பெண் பேச்சு, அழகில் மயங்கி ரூ.1.66 கோடி இழந்த மென்பொறியாளர்
இளம்பெண் பேச்சு, அழகில் மயங்கி ரூ.1.66 கோடி இழந்த மென்பொறியாளர்
ADDED : மே 29, 2026 12:05 AM
பெங்களூரு: இளம்பெண்ணின் பேச்சு மற்றும் அழகில் மயங்கிய மென்பொறியாளர் ஒருவர், 1.66 கோடி ரூபாயை பறி கொடுத்தார்.
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில், மென் பொறியாளராக பணியாற்றுபவர் சவுரவ் துபே, 30. இவருக்கு பிப்ரவரி 15ல், 'டன்டன்' என்ற டேட்டிங் செயலியில், ரியா அகர்வால் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருவரும் சாட்டிங் செய்தனர்; நாளடைவில் நெருக்கமாகினர்.
சவுரவ் துபேவின் மொபைல் எண்ணை பெற்றுக்கொண்ட ரியா அகர்வால், அவ்வப்போது ஆடியோ, வீடியோ கால் செய்து பேசி, சவுரவின் நம்பிக்கையை பெற்றார்.
இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, ஆசை வார்த்தை கூறினார். அவரது அழகு மற்றும் பேச்சில் சவுரவ் மயங்கினார். இதை சாதகமாக பயன்படுத்திய ரியா அகர்வால், ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால், மிக குறுகிய காலத்தில், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டினார்.
தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் என்பதால், அவர் கூறியதை நம்பிய சவுரவ், ரியா கூறிய வங்கி கணக்கில், பல தவணைகளாக, 1.66 கோடி ரூபாய் முதலீடு செய்தார்.
கோடிக்கணக்கில் முதலீடு செய்த அவருக்கு, வெறும் 4,250 ரூபாய் மட்டுமே, திரும்ப கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், தனக்கு கிடைத்த லாபம் மற்றும் அசல் தொகையை, திரும்ப தரும்படி கேட்டார்.
ஆனால் ரியா அகர்வால் பதில் அளிக்கவில்லை. சவுரவ் தொடர்ந்து பணம் கேட்டு, நெருக்கடி கொடுத்ததால் ரியா தன் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்தார். தான் ஏமாந்ததை உணர்ந்த சவுரவ், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் ரியா அகர்வாலை தேடி வருகின்றனர். அவரது வங்கி கணக்குகளை வைத்து, விசாரணை நடத்துகின்றனர்.
சைபர் குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:
டேட்டிங் செயலி உட்பட, பல்வேறு செயலிகளில் அறிமுகமாகும் நபர்களை நம்ப கூடாது. அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பி, பணத்தை இழக்க வேண்டாம் என, பலமுறை நாங்கள் எச்சரித்துள்ளோம். ஆனால் படித்தவர்களே ஆன்லைன் மோசடிக்கு ஆளாகின்றனர்.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி, பணம் பறிக்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
