/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திடக்கழிவு மேலாண்மை பணிகள்: மண்டல கமிஷனர்களே பொறுப்பு
/
திடக்கழிவு மேலாண்மை பணிகள்: மண்டல கமிஷனர்களே பொறுப்பு
திடக்கழிவு மேலாண்மை பணிகள்: மண்டல கமிஷனர்களே பொறுப்பு
திடக்கழிவு மேலாண்மை பணிகள்: மண்டல கமிஷனர்களே பொறுப்பு
ADDED : ஆக 16, 2025 11:19 PM
பெங்களூரு: 'பெங்களூரில் குப்பை சேகரிப்பு, குப்பை மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாநகராட்சி மண்டல கமிஷனர்களே மேற்பார்வையிடுவர்' என, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரில் குப்பையை அள்ளுவது, பதப்படுத்துவது, மறுசுழற்சி செய்வது போன்ற பணிகளை பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் செய்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் திடக்கழிவு மேலாண்மை இயக்குநரே கண்காணித்து வந்தார்.
ஐந்தாவது இடம் பெங்களூரில் சாலை, மார்க்கெட் போன்ற பல பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல், அசுத்தமாக காட்சி அளிக்கின்றன. நம் நாட்டில் உள்ள நகரங்களின் துாய்மை, சுகாதாரம் மதிப்பிடுவதற்கான 'ஸ்வச் சர்வேக் ஷன் 2025' கணக்கெடுப்பு குறித்த அறிக்கை, கடந்த ஜூலையில் வெளியானது. இதில், துாய்மையற்ற நகரங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெங்களூரு பிடித்தது.
இதனால், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை இயக்குநராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹரிஷ் குமாரை பணிமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த பதவிக்கு எலஹங்கா மண்டல கமிஷனராக இருந்த கரீ கவுடா நியமிக்கப்பட்டார். இது போன்று தலைமை அதிகாரிகளை பணிமாற்றம் செய்த போதிலும், பெங்களூரில் குப்பையை சேகரித்து, துாய்மையாக வைத்திருக்க முடியவில்லை.
முக்கிய முடிவு இதை கருத்தில் கொண்டு, துணை முதல்வர் சிவகுமார், தலைமை செயலர் ஷாலினி உட்பட பல அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதன்படி, பெங்களூரில் திடக்கழிவு மேலாண்மையை, மாநகராட்சியின் மண்டல கமிஷனர்களே மேற்பார்வையிடுவர். இவர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளே திடக்கழிவு மேலாண்மை இயக்குநரும் இருப்பர். பொது இடங்கள் துாய்மையாக இருப்பதற்கு மண்டல கமிஷனரே பொறுப்பு.
வழக்கம் போல, குப்பை சேகரிக்கும் பணிகளை பெங்களூரு திடக்கழிவு மேலாண்மையே செய்யும்; இந்த திட்டம் பெங்களூரு மாநகராட்சியை ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கும் வரை அமலில் இருக்கும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.