
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவிற்கு வாழும் கலை அமைப்பின் சர்வதேச அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் இரங்கல் தெரிவித்துள்ளார். 'போப் பிரான்சிஸ், கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு, கத்திரிகுப்பே சாலையில் நேற்று முன்தினம் ஒரு சிறுவன் புல்லட் பைக்கை, ஹெல்மெட் அணியாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். பின்புறத்தில் ஒரு வாலிபர் உட்கார்ந்து இருந்தார். சிறுவன் பைக் ஓட்டுவதை, பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர், தன் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ பரவி வருகிறது. சிறுவன் மீதும், அவரது பெற்றோர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு, ஜே.பி., நகரின் 8வது கட்ட சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது, ஆட்டோ ஒன்று மோதும் வகையில் வந்தது. இதனால், கோபமடைந்த கார் ஓட்டுநர், ஆட்டோக்காரரை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், காரில் வந்த நபரை பார்த்து, ஆபாச சைகை காண்பித்து, மிரட்டினார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் நேற்று நடந்த கல்வி நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “செயற்கைக்கோள் ஏவுதல், பிற தொழில்நுட்பங்களில் இஸ்ரோ மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளது. இச்சாதனைகளை அடுத்த 50 ஆண்டுகளுக்கு யாராலும் முறியடிக்க முடியாது. 2040ம் ஆண்டுக்குள் பி.எஸ்.எல்.வி., ஏவுகலன்களின் எடை குறைக்கப்படும். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. ஜி - 20 நாடுகளுக்காக செயற்கைக்கோள்கள் செய்யும் பணி நடக்கிறது,” என்றார்.
பெங்களூரு, எஸ்.எம்.எஸ்., ஆர்கேட் சாலையில், ஹிந்தி பேசும் இளைஞர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநரிடம், 'கட்டாயம் ஹிந்தியில் பேச வேண்டும்' என்று கூறும் வீடியோ வைரலானது. இந்த நிலையில், அந்த இளைஞர் மன்னிப்பு கேட்டு நேற்று வீடியோ வெளியிட்டார். வீடியோவில், 'பெங்களூரில் ஒன்பது ஆண்டுகளாக இருக்கிறேன். கர்நாடகா மீது மிகுந்த மரியாதை உள்ளது. என் வார்த்தைகள் கன்னடர்கள் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்' என கெஞ்சினார்.