/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கண்டிப்பு தந்தையை கொன்ற மகன் கைது
/
கண்டிப்பு தந்தையை கொன்ற மகன் கைது
ADDED : ஏப் 21, 2025 05:06 AM
விவேக்நகர்: கல்லுாரி முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்ததை கண்டித்த தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு விவேக்நகர் வண்ணார்பேட் ஆந்திரா காலனியில் வசித்தவர் இஸ்லாம் அரப், 47. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
இவரது மகன் போலு அரப், 20. தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு இஸ்லாம் மனைவி வெளியே சென்று இருந்தார். வீட்டில் தந்தையும், மகனும் மட்டும் இருந்தனர்.
இந்நிலையில், விவேக்நகர் போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய போலு, வீட்டிற்குள் புகுந்த நான்கு பேர் எனது தந்தையை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பியதாக கூறினார்.
சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தினரிடம், போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இஸ்லாம் வீட்டிற்குள் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் போலு மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் தந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
'ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் தந்தை மிகவும் கண்டிப்பாக இருந்தார். அதிகம் பணம் செலவு செய்யவிடவில்லை. கல்லுாரியில் இருந்து தாமதமாக வந்தாலும் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்தார்.
என்னையும் ராணுவத்தில் சேர்த்து விட நினைத்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. தாமதமாக வருவதை பற்றி கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்தேன்' என்று, போலு வாக்குமூலம் அளித்து உள்ளார்.