விரைவில் பெங்., - மும்பை படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
விரைவில் பெங்., - மும்பை படுக்கை வசதி வந்தே பாரத் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ADDED : மே 17, 2026 11:28 PM

பெங்களூரு: ''பெங்களூரில் இருந்து மும்பைக்கு படுக்கை வசதி கொண்ட புதிய வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கப்படும்,'' என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மும்பை லோக்மான்ய திலக் முனையம் இடையே புதிய விரைவு ரயில் சேவையை, டில்லியில் இருந்தபடி காணொளி மூலம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
கர்நாடகாவின் தெற்கு, வடக்கு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. பெங்களூரு - மும்பை இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் துவங்கும்.
சமீப ஆண்டுகளில் ரயில்வேயில் குறிப்பிடத்தக்க நிதியுதவி அதிகரித்துள்ளது. இது கர்நாடகாவில் புதிய ரயில்வே திட்ட பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 2,160 கோடி ரூபாய் செலவில், 61 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், ஒன்பது ஏற்கனவே நிறைவடைந்து உள்ளன. பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையம் 485 கோடி ரூபாயிலும்; யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் 367 கோடி ரூபாயிலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
புறநகர் ரயில் கர்நாடகாவில் 2014 முதல் 1,750 கி.மீ., புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஹாசன் - மங்களூரு பிரிவில் உள்ள சிக்கலான மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தில், பையப்பனஹள்ளி - சிக்கபானவாரா மற்றும் ஹீலலிகே - ராஜனகுன்டே ஆகிய வழித்தடங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, ரயில் நிலைய பணிகள் நடந்து வருகின்றன.
கே.எஸ்.ஆர்., பெங்களூரு - தேவனஹள்ளி வழித்தடத்திற்கு மாநில அரசும், ரயில்வேயும் இணைந்து ஒப்புதல் அளித்துள்ளன. மேலும், புவியியல் தொழில்நுட்ப ஆய்வும் நிறைவடைந்துள்ளது. கெங்கேரி - ஒயிட்பீல்டு வழித்தடத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் துவங்கும்.
இப்புறநகர் ரயில் இணைப்பில், விமான நிலையம், எலக்ட்ரானிக் சிட்டி, மாரத்தஹள்ளி, ஹெப்பால் உட்பட முக்கிய மையங்களை இடம் பெறும்.
கர்நாடகாவில் தற்போது 12 ஜோடி வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. பெங்களூரு - மங்களூரு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. விரைவில் கோவாவின் மட்கான் வரையிலான கடலோர மாவட்டங்களின் இணைப்பை மேம்படுத்தும்.
புல்லட் ரயில் பெங்களூரை, ஹைதராபாத் - சென்னையுடன் இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
தொலைநோக்கு பார்வையுடன், மும்பை, பெங்களூரு மற்றும் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்வே பணிகள், 7,000 கி.மீ., வரை விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பேசியதாவது:
தனிசந்திராவில் 270 கோடி ரூபாய் செலவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் பராமரிப்பு பணிமனையும்; பெங்களூரு எஸ்.எம்.வி.டி.,யில் 52.73 கோடி ரூபாய் செலவில் 'சேர் கார்' பராமரிப்பு வசதி மையமும் அமைக்கப்படும்.
ரயில்களின் திறனை அதிகரிப்பதற்காக, பையப்பனஹள்ளி - ஓசூர் வழித்தடம் இரட்டைப்பாதை பணிக்கு 1,116 கோடி ரூபாய்; பெட்டஹலசூரு - ராஜனகுன்டே வழித்தடம் இரட்டைப்பாதை பணிக்கு 248 கோடி ரூபாயும்; பெங்களூரை சுற்றி உள்ள வழித்தடங்களுக் 1,347 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரூ.6,936 கோடியில்... யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு, லொட்டேகொல்லஹள்ளி, பையப்பனஹள்ளி, பெனுகொண்டா, மைசூரு, ஜோலார்பேட்டை உட்பட முக்கிய பகுதிகளில், 6,936 கோடி ரூபாய் செலவில், தானியங்கி சிக்னல் பணிகள் நடந்து வருகின்றன.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில், கர்நாடகாவில் ரயில்வேக்கு 7,748 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2014 முதல் 3,840 கி.மீ., ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, 3,742 கி.மீ., மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், மாநிலம், 100 சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வா று அவர் பேசினார்.
