/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிலை நிறுவுவதில் மோதல் தடியடி நடத்திய எஸ்.பி.,
/
சிலை நிறுவுவதில் மோதல் தடியடி நடத்திய எஸ்.பி.,
ADDED : மே 01, 2025 05:26 AM

சிக்கபல்லாபூர்: பூங்காவில் சிலை நிறுவுவதில் இரண்டு சமூகத்தினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எஸ்.பி., களத்தில் இறங்கி தடியடி நடத்தினார்.
சிக்கபல்லாபூர் குடிபன்டே அம்பேத்கர் சதுக்கத்தில் நகர பஞ்சாயத்து சார்பில், கடந்த 2022ல் பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்கா வளாகத்தில் தங்களது சமூக தலைவர்கள் சிலையை நிறுவுவது தொடர்பாக, இரு சமூகத்தினர் இடையில் கடந்த 3 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரு சமூகத்தினர் தங்களது சமூக தலைவர் சிலையை நிறுவ, பூமி பூஜை செய்தனர். இதற்கு இன்னொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூகத்தினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த குடிபன்டே போலீசார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். யாரும் போலீசார் சொல்வதை கேட்கவில்லை.
இதற்கிடையில் அங்கு வந்த எஸ்.பி., குஷால் சவுக்சேயும் பேச்சு நடத்தி பார்த்தார். யாருமே கேட்கவில்லை. இதனால் கூட்டத்தை கலைக்க எஸ்.பி.,யே தடியடி நடத்தினார். இரு சமூகத்தினரும் சிதறி ஓடினர். ஒரு சிலர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களையும் பிடித்து இழுத்து எஸ்.பி., அப்புறப்படுத்தினார்.