சட்டசபையை நடத்த முடியாமல் திணறிய சபாநாயகர்: பேச வாய்ப்பு கிடைக்காத அமைச்சர், எதிர்க்கட்சியினர்
சட்டசபையை நடத்த முடியாமல் திணறிய சபாநாயகர்: பேச வாய்ப்பு கிடைக்காத அமைச்சர், எதிர்க்கட்சியினர்
ADDED : செப் 22, 2026 01:47 AM
மறைந்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சிரியண்ணவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சபை துவங்கி அரை மணி நேரத்திற்கு மேலாகியும், எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்களே பேசினர். இதை சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலும் அனுமதித்தார்.
எப்போதும் ஆவேசமாக பேசும் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமாரை, பேசவிடக்கூடாது என முடிவெடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ரங்கநாத், நயனா மோட்டம்மா தொடர்ச்சியாக கூச்சலிட்டனர். விரக்தியடைந்த சுனில் இருக்கையில் அமர்ந்தார்.
எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் முதல்வர் சிவகுமார் பதிலளித்த பின், அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, மற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ச்சியாக பதிலளித்தனர். இதனால், எதிர்க்கட்சியினர் பேச முடியாமல் தவித்தனர்.
சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீலிடம் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தன்னை பேச அனுமதிக்கும்படி பல முறை கோரிக்கை வைத்தார். இதை அவர் கவனிக்கவில்லை. ஆத்திரமடைந்த அமைச்சர், தான் கையில் வைத்திருந்த கோப்புகளை தன் மேஜையில் கோபமாக வைத்தார். என் இருக்கையை மாற்றி கொடுங்கள் என கோரிக்கை வைத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட போதும், காங்., - எம்.எல்.ஏ., நயனா மோட்டம்மா அடிக்கடி குறுக்கிட்டார். இதனால், 'அடுத்த அரைமணி நேரம் நீங்களே பேசுங்கள். நான் பேசப்போவதில்லை' என்ற கூறியவாறு அசோக், தனது இருக்கையில் அமர்ந்தார்.
முன்அனுபவம் இல்லாததால் சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் சபையை நடத்த முடியாமல் திணறினார். எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும்; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்கார வேண்டும் என சபாநாயகரின் பணியை முதல்வர் சிவகுமார் செய்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் கூறிய காங்., - எம்.எல்.ஏ., ராஜண்ணா, யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் சிவகுமாரே பதிலளிக்கிறார்; அந்தந்த துறை அமைச்சர்களை பதிலளிக்க சொல்லுங்கள் என எதிர்க்கட்சி யினர் முறையிட்டனர். இதற்கு, அமைச்சர் பசவராஜராயரெட்டி, 'சிவகுமார் விராட் கோலி போன்றவர், அனைத்து பந்துகளையும் அவரே அடிப்பார். அவர் ஒரு ஆல் ரவுண்டர்' என்றார். இது அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன் என சமீபத்தில் அறிவித்த காங்., மூத்த தலைவர் ஹெச்.கே.பாட்டீலுடன், அமைச்சர் சிவலிங்க கவுடா நீண்ட நேரம் உரையாடினார்.
நெலமங்களா காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ், உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே காலில் விழுந்தார். பதிலுக்கு அவர் காலில் விழ பிரியங்க் முற்பட்டார். இருவரில் பிரியங்க் கார்கே மூத்தவர்.
