/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குமாரசாமி மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை
/
குமாரசாமி மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை
குமாரசாமி மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை
குமாரசாமி மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை
ADDED : ஜூன் 19, 2025 11:25 PM

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி மீதான, நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு, ராம்நகரின் பிடதி கேத்தகானஹள்ளியில் உள்ளது.
இந்த வீட்டை ஒட்டி உள்ள 14 ஏக்கர் அரசு நிலத்தை குமாரசாமி, அவரது உறவினர்கள் ஆக்கிரமித்தது பற்றி, லோக் ஆயுக்தா போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்காததால், காங்கிரஸ் அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமலன் ஆதித்யா பிஸ்வாஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவை, கடந்த ஜனவரி 28ம் தேதி அரசு அமைத்தது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி கேத்தகானஹள்ளி கிராமத்தில் உள்ள சர்வே எண் 7, 8, 9, 10, 16, 17, 79ல் சிறப்பு புலனாய்வு குழு, வருவாய், நில அளவை துறையினர் இணைந்து கூட்டாக ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 14 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது, உறுதி செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்கும் பணிகளும் துவங்கின. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குமாரசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்ய கோரி குமாரசாமி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி இந்திரேஷ் விசாரிக்கிறார்.
குமாரசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் உதய்ஹோல்லா, நிஷாந்த் வாதிடுகையில், 'எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. அந்த குழுவின் விசாரணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என கோரினர்.
அரசு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்திரேஷ் நேற்று நடந்த விசாரணையின்போது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மனு மீதான அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.