/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
/
சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி
ADDED : மே 13, 2025 12:40 AM
பெங்களூரு : கர்நாடகாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்களின் விசாரணை நடைமுறையை பலப்படுத்தும் வகையில் போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, சி.சி.ஐ.டி.ஆர்., எனும் சைபர் குற்ற விசாரணை பயிற்சி மற்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் சைபர் குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. மாநிலத்தில் பதிவாகும் மொத்த வழக்குகளில், 30 சதவீதம் வழக்குகள் சைபர் குற்றங்கள் சம்பந்தப்பட்டதாகும்.
பெங்களூரில் 40 சதவீதம் வழக்குகள் பதிவாகின. குற்றவாளிகள் மோசடி செய்ய பல்வேறு நுாதன வழிகளை கையாள்வதால், கண்டுபிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
வங்கிக் கணக்கு, டேட்டாக்களை திருடுவது, வெவ்வேறு துறைகளை ஹேக் செய்வது உட்பட, பல மோசடிகள் நடக்கின்றன. கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களை பின்னுக்கு தள்ளி, சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன.
சைபர் உலகில் என்னென்ன நடக்கின்றன என்பதை, அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய குற்றங்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க, போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள், வக்கீல்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சமூக வலைதளங்கள் பயன்பாடு, நிர்வகிப்பு குறித்து சி.சி.ஐ.டி.ஆர்., சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 45,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் விசாரணை சிக்கலானவை. இதற்கு ஏற்றார் போன்று விசாரணை அதிகாரிகளின் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். எனவே டிஜிட்டல் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் நான்கு ஆண்டுகளில் 62,000 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகின. பெங்களூரு நகரின், ஒயிட்பீல்டு பகுதியில் அதிக வழக்குகள் பதிவாகின. எனவே ஐ.டி., - பி.டி., நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
இதில், 60 வயதை கடந்தவர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 2023ல் 46.7 கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது, 2024ல் 182.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம், மூத்த குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.