/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் தேர்ச்சி 62.34 சதவீதம்!: 625/625 மதிப்பெண் எடுத்து 22 பேர் சாதனை
/
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் தேர்ச்சி 62.34 சதவீதம்!: 625/625 மதிப்பெண் எடுத்து 22 பேர் சாதனை
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் தேர்ச்சி 62.34 சதவீதம்!: 625/625 மதிப்பெண் எடுத்து 22 பேர் சாதனை
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளில் தேர்ச்சி 62.34 சதவீதம்!: 625/625 மதிப்பெண் எடுத்து 22 பேர் சாதனை
ADDED : மே 02, 2025 11:20 PM

கர்நாடகாவில் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நடந்தன. மாநிலத்தில் 2,818 மையங்களில் நடந்த தேர்வை 8,42,173 மாணவ - மாணவியர் எழுதினர்.
ஏப்ரல் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரை, விடைத்தாள் திருத்தும் பணி நடந்தது. 35 கல்வி மாவட்டங்களில் 237 மையங்களில் நடந்த, வினாத்தாள் திருத்தும் பணியில் 60,943 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பெண் வாரிய அலுவலகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, முதன்மை செயலர் ரஷ்மி மகேஷ் நேற்று வெளியிட்டனர். பின், மது பங்காரப்பா அளித்த பேட்டி:
கருணை மதிப்பெண்
கர்நாடகாவில் 2024 - 2025ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை 8,42,173 மாணவ - மாணவியர் எழுதினர். இதில் 5,24,984 பேர் வெற்றி உள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 62.34. கடந்த ஆண்டு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இம்முறை யாருக்கும் கருணை மதிப்பெண் வழங்கவில்லை.
அப்படி இருந்தும் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி 8 சதவீதம் அதிகரித்து உள்ளது. மாணவியர் 74 சதவீதம்; மாணவர்கள் 58.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்களின் பெற்றோர் மொபைல் எண்களுக்கு, தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், https://karresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
கலபுரகி கடைசி
தேர்ச்சி சதவீதத்தை அடிப்படையாக கொண்டு, 35 கல்வி மாவட்டங்களுக்கு, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தட்சிண கன்னடா மாவட்டம் 91.12 சதவீதத்துடன் முதலிடமும்; உடுப்பி 89.96 சதவீதத்துடன் இரண்டாவது இடமும்; உத்தர கன்னடா 83.19 சதவீதத்துடன் மூன்றாவது இடமும் பிடித்து உள்ளது. கலபுரகி மாவட்டம் 42.43 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மூன்று பொது தேர்வு நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) முதல் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
இம்மாதம் 26ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை இரண்டாம் தேர்வும்; அடுத்த மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்றாம் தேர்வும் நடத்தப்படுகிறது.
22 பேர் சாதனை
முதல் தேர்வில் தங்களுக்கு குறைவான மதிப்பெண் வந்து உள்ளது என்று நினைக்கும் மாணவர்கள், இரண்டாவது முறை மீண்டும் எழுதலாம்.
அதிலும், குறைவாக வந்தது என்று நினைத்தால், மூன்றாவது முறையும் எழுதலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், இரண்டாவது, மூன்றாவது தேர்வை எழுதலாம்.
தேர்ச்சி பெறாதவர்கள் கவலைப்பட வேண்டாம். இம்முறை 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து 22 பேர் முதலிடம் பிடித்து உள்ளனர். கடந்த முறை இருவர் தான் 625க்கு 625 மதிப்பெண்கள் எடுத்து இருந்தனர்.
இன்று (நேற்று) முதல் 7ம் தேதி வரை விடைத்தாள் நகல் பெற்று கொள்ளலாம். நாளை 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல், மீண்டும் திருத்த விண்ணப்பிக்கலாம்.
குடிமக்கள் சேவைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான இயக்குநரகத்துடன், நாங்கள் இணைந்து கர்நாடக ஒன் என்ற செயலி உருவாக்கி உள்ளோம்.
பிளே ஸ்டோரில் சென்று செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த செயலி மூலம் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மீண்டும் திருத்தத்திற்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி துறை அலட்சியம்?
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முதல் மொழி பாடமாக, தமிழ் மொழியில் கடந்த ஆண்டு 76 பேர் தேர்வு எழுதி 56 பேர் வெற்றி பெற்றனர். இம்முறை 66 பேர் தேர்வு எழுதி 25 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி 37.88 சதவீதம் தான்.
விஜயபுராவின் முத்தேபிஹால் நகரபேட்டை சேர்ந்த, தனியார் பள்ளி மாணவர் அகில் அகமது நடாப் தேர்வில் 625க்கு 625 மதிப்பெண்கள் பெற்று, முதலிடம் பிடித்தாலும், தேர்ச்சி விகிதத்தில் விஜயபுரா 34வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கியதால், கடந்த ஆண்டு தேர்வில் 73.40 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு கருணை மதிப்பெண் இல்லாததால் 62.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்கு முன்னேற எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தான் முக்கியம் ஆகும். ஆனால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதால், கல்வி துறை அலட்சியமாக செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.