பா.ஜ.,வுக்குள் பிரச்னைகள் குழப்பம் இருப்பது உண்மையே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மாநில தலைவர் விஜயேந்திரா
பா.ஜ.,வுக்குள் பிரச்னைகள் குழப்பம் இருப்பது உண்மையே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட மாநில தலைவர் விஜயேந்திரா
ADDED : மார் 06, 2026 05:31 AM

தாவணகெரே: ''பா.ஜ.,வில் பிரச்னைகள், குழப்பங்கள் இருப்பது உண்மை தான்,'' என, அக்கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா ஒப்புக்கொண் டது அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா பா.ஜ., தலைவர் பதவியை முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா, 2023ல் கைப்பற்றினார். இளம் வயதில் விஜயேந்திரா மாநில தலைவரானது, கட்சியின் சீனியர்கள் பலருக்கு பிடிக்கவில்லை. அதனால், விஜயேந்திரா நியமனத்தை, பகிரங்கமாக பசனகவுடா பாட்டீல் எத்னால் எதிர்த்தார். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
விஜயேந்திராவின் பேச்சை யாரும் பெரிதாக கேட்டு நடப்பதில்லை. அவரை எப்படியாவது தலைவர் பதவியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்ற, ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையிலான அணி கட்சிக்குள் செயல்பட்டு வருகிறது.
புரட்சி படை 'புரட்சி படை' என அழைக்கப்படும் ரமேஷ் அணியினர் சப்தம் போடாமல் காய் நகர்த்தி வருகின்றனர். மாநில தலைவர் பதவியை பறிக்க தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக, வெளியுலகிற்கு தெரியாமல் கட்சிக்குள் புகை கசிந்து கொண்டிந்தது. இந்த புகை சமீப நாட்களாக, கட்சி தலைவர்கள் பலரது கண்ணில் இருந்து கண்ணீரை வரவைக்க காரணமாகி விட்டது.
அதாவது, தாவணகெரே தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த சிவசங்கரப்பா உடல்நலக்குறைவால், கடந்த ஆண்டு டிசம்பரில் உயிரிழந்தால், அத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா, யாரிடமும் ஆலோசிக்காமல், அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்து தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்டார். இது, கட்சிக்குள் இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியது.
'சீட்' யாருக்கு? அதேநேரத்தில், இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் யார் போட்டியிடுவது என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது. கட்சிக்குள் முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையில் புதிய அணி ஒன்று உருவாகி உள்ளது. இவர்கள், தங்கள் அணியை சேர்ந்தவருக்கே இடைத்தேர்தலில் 'சீட்' கொடுக்க வேண்டும் என விடாப்பிடியாக இருக்கின்றனர்.
இந்த பிரச்னைகள் குறித்து நேற்று தாவணகெரேவில் விஜயேந்திரா அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் குழப்பம், பிரச்னை இருப்பது உண்மையே. கட்சியில் சிறிய அளவிலான பிரச்னைகள் இருக்கின்றன. இதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த நிலை எதிர்காலத்தில் நிச்சயம் தொடராது. விரைவில் சரி செய்யப்படும். கட்சி தலைவர்களிடம் பேச்சு நடத்தி அனைத்தையும் சரி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயேந்திரா பொது வெளியில், கட்சிக்குள் குழப்பம் இருப்பதை ஒப்புக்கொண்டது, காங்கிரசாருக்கு அல்வா சாப்பிடுவது போல் உள்ளது. ஏனெனில், உட்கட்சி பிரச்னை, முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக பா.ஜ.,வினர் விமர்சித்தால், பதிலுக்கு காங்கிரசார், 'உங்கள் கட்சியிலும் பிரச்னை இருப்பதை விஜயேந்திராவே ஒப்புக்கொண்டுவிட்டார்' என பதிலடியாக விமர்சிப்பர். அதுமட்டுமின்றி, விஜயேந்திரா திடீரென பொது வெளியில் கட்சிக்குள் குழப்பம் இருபத்தை ஒப்புக்கொண்டது, அக்கட்சிக்கு மட்டுமின்றி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
