துர்நாற்றம் வீசும் பொது கழிப்பறைகள் பெங்களூரில் ஓட்டுநர்கள், பெண்கள் அவதி
துர்நாற்றம் வீசும் பொது கழிப்பறைகள் பெங்களூரில் ஓட்டுநர்கள், பெண்கள் அவதி
ADDED : ஆக 09, 2026 11:08 PM
பெங்களூரு: பெங்களூரில் உள்ள பெரும்பாலான பொது கழிப்பறைகள் உடைந்த தாழ்ப்பாள், பாழான ஜன்னல்கள், பான் மசாலா கறைகள் என, அவல நிலையில் உள்ளன. இவற்றை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கும் சூழ்நிலை உள்ளது.
பெங்களூரில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், 'டெலிவரி' ஊழியர்கள், நடைபாதை வியாபாரிகள் உட்பட பலரும் பொது கழிப்பறைகளை அதிகமாக பயன்படுத்து கின்றனர்.
ஆனால் நகரில் போதுமான பொது கழிப்பறைகள் இல்லை. இருக்கும் சில கழிப்பறைகளும், பயன்படுத்த தகுதியாக இல்லை. இவற்றின் உள்ளே சென்று வந்தால், தொற்று ஏற்படுவது நிச்சயம்.
58 சதவீதம் பெங்களூரில் 142 பொது கழிப்பறைகள் உள்ளன. இவற்றில், பல கழிப்பறைகள் செயல்படவில்லை. 58 சதவீதம் கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசுகிறது.
சரியான நிர்வகிப்பு இல்லாமல், பயனின்றி கிடக்கின்றன. பொது கழிப்பறைகள் இல்லாமல், பலரும் குறிப்பாக, பெண்கள் அவதிப்படுகின்றனர். லட்சக்கணக்கான பயணியர் வந்து செல்லும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலும் இதே சூழ்நிலை உள்ளது.
பி.எம்.டி.சி., நடத்துநர் ஒருவர் கூறியாவது:
கடந்த 28 ஆண்டுகளாக, பொது கழிப்பறைகளை பயன்படுத்துகிறேன்.
இதனால் எனக்கு மூன்று முறை, சிறுநீரக தொற்று ஏற்பட்டது. எனவே பொது கழிப்பறைக்கு செல்லவே தயக்கமாக உள்ளது.
இங்கு செல்ல வேண்டும் என்பதால், தண்ணீர் குடிப்பதை தவிர்க்கிறேன்.
பொது கழிப்பறைகளில், சுத்தம் என்பதே இல்லை. தண்ணீரும் இருப்பது இல்லை. 'சானிடரி நாப்கின்'கள் உட்பட குப்பை ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. உள்ளே சென்றாலே குமட்டல் வரும். பொது கழிப்பறையை பயன்படுத்தினால், நோய் தாக்குவது உறுதி. என்னை போன்று பல பெண் நடத்துநர்களும், இதே கஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொறுப்புணர்வு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது:
பொது கழிப்பறைகளை சுத்தமாக நிர்வகிக்க வேண்டும். இந்த விஷயத்தில், பொது மக்களும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கட்டணம் வசூலித்தாலும் கூட, பொது கழிப்பறைகள், சுத்தமாக பராமரிப்பது இல்லை.
மாநகராட்சி அதிகாரிகள், இந்த விஷயத்தில் அக்கறை காட்டி, பொது கழிப்பறைகளை சரியானபடி நிர்வகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகப்பெறு வல்லுநர் தீப்தி அஸ்வின் கூறியதாவது:
அவ்வப்போது கழிப்பறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக, பெண்கள் தண்ணீர் அருந்தாமல் இருப்பது நல்லதல்ல.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பதும் அபாயம். இது, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும்.
கழிப்பறைகள் துாய்மை இல்லாதது, தண்ணீர் பற்றாக்குறை, கை கழுவ சோப்பு இல்லாதது போன்ற பிரச்னைகள் இருந்தால், மாதவிடாயின் போது, பெண்களால் துாய்மையை காப்பாற்றி கொள்வதில், பிரச்னை ஏற்படும்.
பொது கழிப்பறைகளுக்கு பதிலாக, சுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவது நல்லது. கழிப்பறைக்கு சென்று வந்த பின், கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
