என்னை பா.ஜ.,வில் சேர்க்க முயற்சி 'மாஜி' அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்
என்னை பா.ஜ.,வில் சேர்க்க முயற்சி 'மாஜி' அமைச்சர் ஈஸ்வரப்பா தகவல்
ADDED : ஆக 09, 2026 11:09 PM

ஷிவமொக்கா: ''பா.ஜ.,வை தவிர நான் எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன். அது என் தாய் கட்சி. என்னை மீண்டும் சேர்த்து கொள்ள, முயற்சி நடக்கிறது,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என்னை மீண்டும் பா.ஜ.,வில சேர்க்க, முயற்சி நடக்கிறது. கட்சியில் உள்ள குழப்பங்கள் சரியானால் மட்டுமே, நான் கட்சிக்கு செல்வேன். பா.ஜ., எனக்கு தாய் கட்சியாகும். இந்த கட்சியை தவிர, வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன்.
நான் சில கோரிக்கைகளை, கட்சியிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அவை நிபந்தனைகள் அல்ல. பா.ஜ.,வில் இணைய நான் நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை. கட்சியின் நலனுக்காக, சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது.
மூத்தவர்கள் உருவாக்கிய காங்கிரஸ், இன்று வீதிக்கு வந்துள்ளது. 1885ல் அனைத்து தேசபக்தர்கள் இணைந்து, காங்கிரசை அமைத்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்.,சின் ஹெட்கேவார், பால கங்காதர திலகர் உட்பட பலரும் இருந்தனர். இன்று அதிகாரத்துக்காக காங்கிரஸ், கீழ் மட்டத்துக்கு இறங்கியுள்ளது.
கர்நாடக காங்கிரசில், சுயநலம் நிரம்பியுள்ளது. அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களும் கூட, முதல்வருக்கு எதிராக கோஷமிடுகின்றனர். சில எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் பதவி வழங்குவதாக, முதல்வர் சிவகுமார் உறுதி அளித்திருந்தார்.
அமைச்சர் பதவி கிடைக்காத பேளூர் கோபால கிருஷ்ணா, தனக்கு பதவி கிடைக்காமல் போக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலே காரணம் என, குற்றம்சாட்டியுள்ளார், காங்கிரசுக்கு இந்த நிலை வந்திருக்க கூடாது. ஒரு பக்கம் வறட்சி, மற்றொரு பக்கம் வெள்ளப்பெருக்கால் மக்கள் பரிதவிக்கின்றனர். இதை பற்றி சிந்திக்க யாரும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
