பங்கு சந்தையில் நஷ்டம் அடைந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
பங்கு சந்தையில் நஷ்டம் அடைந்தவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ADDED : மார் 10, 2026 05:50 AM

பெங்களூரு: பெங்களூரில் பங்கு சந்தையில் லட்சக்கணக்கான ரூபாய் இழந்ததாலும், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தியடைந்தவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ஹெப்பாலில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே, நேற்று முன்தினம் மாலை ஆணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பையப்பனஹள்ளி ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரின் உடல் அருகே இருந்த பையை போலீசார் சோதித்தனர். அதில் கடிதம் ஒன்று இருந்தது.
அதில், 'என் மரணத்துக்கு நானே பொறுப்பு. நான் பங்கு சந்தையில் முதலீடு செய்து, நஷ்டம் அடைந்தேன். இதனால், கடனாளியானேன். இப்போது என் உடல் நலமும் பாதிக்கப்பட்டு உள்ளதால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். இறந்தவர் பெயர் வெங்கடேஷ், 50, என்பது தெரியவந்தது.
பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், லட்சக்கணக்கான ரூபாயை இழந்தார். இதற்காக கடன் வாங்கினார். வாங்கி கடனை திருப்ப செலுத்த முடியாமல் திணறினார்.
கடன் கொடுத்தவர்களும் நெருக்கடி கொடுக்க துவங்கினர். ஒரு பக்கம் கடன் நெருக்கடி, மற்றொரு பக்கம் உடல் நலம் பாதிப்பு. இதனால், வேதனை அடைந்த அவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. பையப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
