ADDED : மே 07, 2026 11:31 PM

கலபுரகி: கலபுரகியில் கடந்த இரண்டு மாதங்களில் திருட்டு மற்றும் தொலைந்து போன 1.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 785 மொபைல் போன்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கலபுரகி நகரின் பல பகுதிகளில் மொபைல் போன்கள் திருட்டு, காணாமல் போனதாக ஏராளமான வழக்குகள் பதிவாகின. இது தொடர்பாக பல போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளை ஒரே குடையின் கீழ் போலீஸ் கமிஷனர் சரணப்பா கொண்டு வந்தார். இந்த வழக்குகள் குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது.
இப்படையின் தீவிர வி சாரணையில், கடந்த 2 மாதங்களில் திருட்டு மற்றும் தொலைந்து போன 785 மொபைல் போன்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 1.44 கோடி ரூபாய்.
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் நேற்று நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. மொபைல் போன் உரிமையாளர்கள் சிலர் நேரில் அழைக்கப்பட்டு, அவர்களுடைய மொபைல் போன்கள் ஒப்படைக்கப்பட்டன. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புகார் அளித்த சில நாட்களிலேயே, தங்கள் மொபைல் போன்கள் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர்.
இது குறித்து, கமிஷனர் சரணப்பா கூறியதாவது:
கடந்த 2 மாதங்களில் காணாமல் போன 785 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையில் பங்கேற்ற போலீசாருக்கு என் பாராட்டுகள். வழக்கமான முறையில் மொபைல் போன்கள் தேடப்படவில்லை. இம்முறை டிஜிட்டல் முறையில் தேடப்பட்டது. இணையதளம், மொபைல் லொகேஷன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேடப்பட்டதால், மொபைல் போன்களை எளிதில் மீட்க முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
