'குழந்தைகள் ஆபாச வீடியோவை மொபைல் போனில் சேமித்து வைத்தாலும் குற்றம் தான்'
'குழந்தைகள் ஆபாச வீடியோவை மொபைல் போனில் சேமித்து வைத்தாலும் குற்றம் தான்'
ADDED : மார் 12, 2026 05:25 AM
பெங்களூரு: ''குழந்தைகள் ஆபாச வீடியோ, புகைப்படங்களை மொபைல் போன் கேலரியில் சேமித்து வைத்தாலும் குற்றம் தான்'' என்று, உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா கூறினார்.
கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் பினோஜ், 38. இவரை ஒரு வழக்கில், கடந்த 2024ம் ஆண்டு பெங்களூரு கமர்சியல் தெரு போலீசார் கைது செய்தனர். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், குழந்தைகளின் ஆபாச வீடியோ, புகைப்படங்களை கேலரியில் சேகரித்து வைத்திருந்தது தெரிந்தது. தகவல் தொழில்நுட்ப பிரிவு 67ன் கீழ் பினோஜ் மீது வழக்குப்பதிவானது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் பினோஜ் மனு செய்தார். நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார்.
பினோஜ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், தனது மனுதாரர் மொபைல் போனில் குழந்தைகள் ஆபாச புகைப்படம், வீடியோவை சேமித்து வைத்திருந்தார். ஆனால் யாருக்கும் பகிரவில்லை. இதனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அரசு தரப்பும் தங்கள் வாதங்களை முன்வைத்தது.
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நேற்று நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், ''மொபைல் போனில் குழந்தைகள் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை சேமித்து வைத்தாலும் அது குற்றம் தான். யாருக்கும் அனுப்பவில்லை என்று வாதிடுவது பயனற்றது.
''கடந்த 2004ல் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றமும், குழந்தைகள் ஆபாச புகைப்படங்களை மொபைலில் சேமித்து வைப்பது குற்றம் தான் என்று கூறி உள்ளது. இதனால் மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்,'' என்றார்.
