ஏப்ரல் 1 முதல் வேலை நிறுத்தம்: வனத்துறை ஊழியர்கள் அறிவிப்பு
ஏப்ரல் 1 முதல் வேலை நிறுத்தம்: வனத்துறை ஊழியர்கள் அறிவிப்பு
ADDED : மார் 25, 2026 06:50 AM
பெங்களூரு: ஊதியத்தை நேரடியாக தங்களின் வங்கி கணக்கில் செலுத் த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 1ம் தேதி முதல் வனத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, மாநில தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நாகராஜு கூறியதாவது:
கர்நாடக வனத்துறையில் கண்காணிப்பாளர்கள், பாதுகாவலர்கள், ஓட்டுநர்கள் உட்பட 6,000 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2017 வரை இவர்களுக்கு நேரடியாக வங்கி வாயிலாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. பின், இடைத்தரகர்கள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், ஒரு மாதம் வரை தாமதம் ஏற்படுகிறது.
எனவே, முன்னர் இருந்தபடியே நேரடியாக வங்கி கணக்கில் சம்பளத்தை செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, முன்னர் மாதத்துக்கு, 30 நாட்களுக்கு சம்பளம் பெற்று வந்த அவர்கள், இப்போது, 26 நாட்களுக்கு மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். எனவே, முந்தைய சம்பள முறையையே பின்பற்ற வேண்டும்.
வனத்துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்.
ஊழியர்கள் பெறும் குறைந்த சம்பளத்தால், இதனை சேமிக்க முடியாது. பாதுகாப்பு முகாம்களில் இருக்கும் ஊழியர்கள், 24 மணி நேரமும் அங்கேயே இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மனித - விலங்கு மோதல் நடவடிக்கையில், வாகன ஓட்டுநர்களின் சேவை இன்றியமையாதது. 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட வசதி, இப்போதைய ஓட்டுநர்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, அவர்களுக்கு, 'இடர்பாட்டு படி' வழங்க வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட இ.பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பணத்தில், 40 சதவீதம் முறைகேடு நடந்துள்ளது. இந்த தொகையை திருப்பித்தர வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஏப்ரல், 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
இதுதொடர்பாக முன்னர் போராட்டம் நடத்திய போது, அப்போது முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனச்செயலர், குடகு எம்.எல்.ஏ., பொன்னண்ணா எங்களை சந்தித்து, நேரடி சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அது, இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
மலை மஹாதேஸ்வரா மலை பகுதியில், புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, 'ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய சம்பளமும், இதர வசதிகளும் செய்து தரப்படும்' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உறுதியளித்தார். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக 15 நாட்களுக்கு முன்னர், தலைமையகத்தில் மனுவும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
எங்களின் பிரச்னையை தீர்க்க அதிகாரிகளுடன் நேரடி சந்திப்பை நடத்த வேண்டும் என்று கூறி, நேற்று திட்டமிடப்பட்டிருந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதன் மூலம் பிரச்னையை தீர்க்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு வனத்துறை அதிகாரி கூறுகையில், 'அனைத்து துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிறுவனங்கள் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த இறுதி முடிவை அரசு எடுக்கும்,'' என்றார்.
வனத்துறை ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், வனப்பகுதியில் ரோந்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
மேலும், மனித - விலங்கு மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருவதால், நிலைமை இன்னும் மோசமாகி விடும்.
