பி.யு.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றதாக நம்ப வைத்த மாணவி தற்கொலை
பி.யு.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றதாக நம்ப வைத்த மாணவி தற்கொலை
ADDED : மே 24, 2026 11:26 PM

கலபுரகி: பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதாக பெற்றோரை நம்ப வைத்த இளம் பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர், பி.யு.சி., தேர்வில் தோல்வி அடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கலபுரகி மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்யாஸ்ரீ பாட்டீல், 18. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, பாக்யாஸ்ரீயின் தந்தை ராஜசேகர் பாட்டீல் கூறுகையில், ''என் மகள் பி.யு.சி., 2ம் ஆண்டு தேர்வில், 92 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவத்துக்கான நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். எதற்காக இந்த முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை. யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை,'' என்றார்.
வழக்கு பதிவு செய்த ஸ்டேஷன் பஜார் போலீசார் விசாரணையை துவக்கியபோது, பல திடுக்கிடும் அம்சங்கள் வெளிவந்தன.
தற்கொலை செய்து கொண்ட பாக்யாஸ்ரீ, தேர்வில் தேர்ச்சி பெறவே இல்லை. 600 மதிப்பெண்களுக்கு 365 மதிப்பெண் மட்டுமே பெற்றார். அத்துடன், வேதியல், கணிதத்தில் தோல்வி அடைந்திருந்தார்.
இதை மறைத்து, தான், 92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக, பெற்றோரை நம்ப வைத்துள்ளார். அவர்களும், மகளை டாக்டராக்கி பார்க்க ஆவலுடன் இருந்தனர். இதற்கான, மே 2ல் நடந்த 'நீட்' தேர்விலும் பாக்யாஸ்ரீ பங்கேற்றார்.
இதற்கிடையே, இரண்டாம் ஆண்டு பி.யு.சி., துணை தேர்வு எழுதினார். மே 21ல் வெளியான முடிவில் வேதியலில் 51 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். ஆனாலும், கணித்தில் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதை வீட்டில் சொல்ல அச்சமடைந்த மாணவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மாணவியின் தற்கொலைக்கு காரணம் இதுதானா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என போலீசார் விசாரிக்கின்றனர்.
