ADDED : செப் 20, 2025 04:59 AM

கலபுரகி: இரும்புக் கம்பியால் அடித்து, பொறியியல் கல்லுாரி மாணவியை கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகா மல்கேடா கிராமத்தை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ, 20. இவர், பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக கடந்த மாத இறுதியில் தன் வீட்டுக்கு வந்தார்.
கடந்த 11ம் தேதி 'வாக்கிங்' செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றார்; திரும்பி வீட்டுக்கே வரவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மல்கேடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மல்கேடா கிராமத்தில் உள்ள ராஜேஸ்வரி சிமென்ட் தொழிற்சாலை கால்வாய்க்கு அருகில் உள்ள பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக மல்கேடா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலையானவர், பாக்யஸ்ரீ என்பது தெரிய வந்தது. அவரது தலையில் இரும்புக் கம்பியால் பல முறை அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பாக்யஸ்ரீ 'வாக்கிங்' செய்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவரை பின்தொடர்ந்து சென்ற அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்ற வாலிபரை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், பாக்யஸ்ரீயை கொலை செய்ததை மஞ்சுநாத் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் மஞ்சுநாத் கூறியதாவது:
என் அண்ணன் வினோத், ராஜேஸ்வரி சிமென்ட் தொழிற்சாலையில் நீண்ட காலமாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அவரை பணி நிரந்தரம் செய்ய பாக்யஸ்ரீயின் தந்தையும், சிமென்ட் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவருமான சென்னபசப்பாவிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர் ஏற்கவில்லை.
விரக்தியடைந்த என் அண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பழிவாங்கும் விதமாக சென்னபசப்பாவின் மகள் பாக்யஸ்ரீயை கடத்திச் சென்று, துன்புறுத்தி இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.