சென்னையில் இருந்து கடத்தி வந்து கர்நாடகாவில் கஞ்சா விற்ற மாணவி
சென்னையில் இருந்து கடத்தி வந்து கர்நாடகாவில் கஞ்சா விற்ற மாணவி
ADDED : மே 13, 2026 11:57 PM

மங்களூரு: சென்னையில் இருந்து, உயர்ரக கஞ்சாவை கொண்டு வந்து, மங்களூரில் விற்ற பி.சி.ஏ., மாணவி கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின், முல்கி ரயில் நிலைய சாலையில், நேற்று முன் தினம் மாலை, இளம் பெண் ஒருவர் போதைப்பொருள் விற்க முயற்சிப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து பனம்பூரு ஏ.சி.பி., தலைமையிலான குழுவினர், அங்கு சென்று சோதனை நடத்தி, போதைப்பொருள் வைத்திருந்த சுஹானா, 21, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது மொபைல் போன் உட்பட, சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இப்பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சுஹானா ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவை சேர்ந்தவர். இவர் உடுப்பியின், குந்தாபுராவில் உள்ள பிரபலமான கல்லுாரியில், பி.சி.ஏ., இறுதியாண்டு படிக்கிறார்.
இவர் பல கடுமையான குற்றங்களில் தொடர்பு கொண்டவர். போதைப்பொருள் விற்றது தொடர்பாக, மங்களூரின், காபூரு போலீஸ் நிலையத்தில், இவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் சென்னையில் இருந்து, உயர் ரக கஞ்சாவை வரவழைத்து, கர்நாடகாவில் பல இடங்களில் விற்றது, விசாரணையில் தெரிந்தது. சுஹானாவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
