கிராம பள்ளிகள் மூடும் திட்டம் மாணவர் சங்கம் எதிர்ப்பு
கிராம பள்ளிகள் மூடும் திட்டம் மாணவர் சங்கம் எதிர்ப்பு
ADDED : மார் 30, 2026 04:41 AM

தேவனஹள்ளி: சோளூர் பிராதரஹள்ளி கிராமங்களின் அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, விஸ்வநாத்பூர் கிராம பள்ளியில் இதன் மாணவர்களை சேர்க்கும் திட்டத்திற்கு அகில இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேவனஹள்ளியில் இதற்கான மாணவர் சங்க கூட்டம், மாணவர் சங்கத் தலைவர் நவாஸ் தலைமையில் நடந்தது.
அவர் பேசியதாவது:
கர்நாடகா முழுவதும் 40,000 அரசுப் பள்ளிகளைப் பலியிடும் நோக்கத்துடன் 'கேபிஎஸ்-மேக்னட்' எனும் புதிய கல்வித் திட்டம் ஏற்படுத்தி உள்ளனர். இத்திட்டத்தின் கீழ், தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள சோளூர், பிராதரஹள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மூடி விட்டு, அதில் படித்து வரும் மாணவர்களை விஸ்வநாத்பூர் பள்ளியில் இணைக்க அரசு முற்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.
இந்த திட்டம், ஏழைச் சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. இதன் மூலம் பொதுக் கல்வியை வணிக மயமாக்க அரசு தீட்டியுள்ள சதித்திட்டமாகும்.
படிக்கும் சிறுவர்களை தொலைதுார கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது அறிவியலுக்குப் புறம்பானதும், பாதுகாப்பற்றதும் ஆகும். கிராமங்களின் கலாச்சார மையங்களாகத் திகழும் பள்ளிகளைக் காப்பாற்ற, பெற்றோர்களும் பொதுமக்களும் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் பள்ளி ஆசிரியர் ஜெயண்ணா உட்பட பலர் பேசினர்.
'பொதுக் கல்வியைக் காப்போம்' என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது.
