பெலகாவி ஏ.பி.எம்.சி.,யில் உபலோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
பெலகாவி ஏ.பி.எம்.சி.,யில் உபலோக் ஆயுக்தா நீதிபதி ஆய்வு
UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 10:59 PM
பெலகாவி: பெலகாவியின் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில், நேற்று திடீர் ஆய்வு செய்த உபலோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, எடையில் மோசடி செய்த வியாபாரிகளை வன்மையாக கண்டித்தார்.
பெலகாவி நகரின் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு, நேற்று காலை திடீரென உபலோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா வந்தார். மார்க்கெட் முழுதும் சுற்றி ஆய்வு செய்த அவர், காய்கறிகளை மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகள், வாங்கும் காய்கறிகளுக்கான ரசீது கொடுக்காததை கண்டறிந்து, இனி, உரிய ரசீதை உடனடியாக கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். .
மேலும், பல வியாபாரிகள், கொள்முதல் செய்யும்போது, எடை போடும் தராசில் மோசடி செய்வதையும் கண்டறிந்த நீதிபதி வீரப்பா, இனியும் விவசாயிகளை ஏமாற்றினால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
ஆய்வின் போது, மார்க்கெட்டில் மூடப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம், துாய்மையில்லாத உணவகம் உள்ளிட்டவற்றைப் பார்த்து கோபமடைந்த நீதிபதி, அங்கிருந்த ஏ.பி.எம்.சி., செயலர் விஸ்வநாத் ரெட்டியிடம் அதிருப்தி தெரிவித்தார். மார்க்கெட்டின் கூலி தொழிலாளர்கள், விவசாயிகளிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
கூலி தொழிலாளர்களுக்கு, சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததை அறிந்து, இரண்டு நாட்களுக்குள் தேவையான அடிப்படை வசதிகளை செய்யும்படி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, விவசாய பவனையும் ஆய்வு செய்தார்.
