ADDED : மார் 30, 2026 04:44 AM

பெங்களூரு: வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெங்களூரு மக்கள், நேற்றிரவு பெய்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளுகுளுக்கு பெயர் போன நகரமான பெங்களூரில், கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. மதிய நேரத்தில் வாகன ஓட்டிகள், சாலையில் செல்லும் போது, கடும் அவதி அடைந்தனர். மாலையிலும் வெப்ப காற்றின் தாக்கமே இருந்தது. இந்நிலையில் நேற்று காலையிலும் பெங்களூரில் வழக்கம்போல வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
ஆனால் மாலை 5:30 மணிக்கு மேல், சிவாஜிநகர், கப்பன் பார்க், எம்.ஜி.ரோடு, தாசரஹள்ளி, பீன்யா, தாசரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இரவு முழுதும் மிதமான மழை பெய்தது.
கோடை வெயிலின் தாக்கத்தில் சிக்கி இருந்த மக்கள், இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பின் சில்லென வீசிய காற்றால் குதுாகலித்தனர். தாசரஹள்ளி புவனேஸ்வரி நகரில் மழைக்கு, பழமையான மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை.
வெப்ப சலனத்தால் மழை பெய்து இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்கள், பெங்களூரில் மிதமான மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
