/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவியில் நடக்கும் கரும்பு விவசாயிகள் போராட்டம்... வலுக்கிறது!; டன்னுக்கு ரூ.3,500 ஆதரவு விலை கேட்டு அரசுக்கு நெருக்கடி தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் மறியல்
/
பெலகாவியில் நடக்கும் கரும்பு விவசாயிகள் போராட்டம்... வலுக்கிறது!; டன்னுக்கு ரூ.3,500 ஆதரவு விலை கேட்டு அரசுக்கு நெருக்கடி தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் மறியல்
பெலகாவியில் நடக்கும் கரும்பு விவசாயிகள் போராட்டம்... வலுக்கிறது!; டன்னுக்கு ரூ.3,500 ஆதரவு விலை கேட்டு அரசுக்கு நெருக்கடி தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் மறியல்
பெலகாவியில் நடக்கும் கரும்பு விவசாயிகள் போராட்டம்... வலுக்கிறது!; டன்னுக்கு ரூ.3,500 ஆதரவு விலை கேட்டு அரசுக்கு நெருக்கடி தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் மறியல்
ADDED : நவ 05, 2025 11:58 PM

பெலகாவி : கரும்பு டன்னுக்கு 3,500 ரூபாயை ஆதரவு விலையாக நிர்ணயிக்க கோரி, பெலகாவியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. சுவர்ண விதான் சவுதா முன்பு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் நேற்று மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. விவசாயிகள் போராட்டம், காங்., அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் வட மாவட்டமான பெலகாவியில் கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. இங்கு சாகுபடி ஆகும் கரும்புகள் பெலகாவி, பாகல்கோட் மாவட்டங்கள், அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆயினும், சர்க்கரை ஆலைகளிடம் இருந்து, தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் சரியாக கிடைப்பது இல்லை என்று, பல ஆண்டுகளாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 1 டன் கரும்புக்கு 3,500 ரூபாயை ஆதரவு விலையாக அரசு நிர்ணயிக்க கோரி, கடந்த 1ம் தேதி முதலகி தாலுகா, குர்லாபுரா கிராம விவசாயிகள் போராட்டத்தை துவக்கினர். நாள் முழுதும் போராட்டம் நடத்தியும் அரசு சார்பில் யாரும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
வேர்வை சிந்தி... முதலகியில் துவங்கிய போராட்டம், தற்போது அனைத்து தாலுகாக்களிலும் பரவி தீவிரம் அடைந்து உள்ளது.
நேற்று முன்தினம் அதானியில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. குர்லாபுராவில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில், கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று முன்தினம் பங்கேற்றார்.
இரவில் போராட்ட களத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து துாங்கினார். நேற்று காலை தனது பிறந்தநாளை, விவசாயிகளுடன் இணைந்து கொண்டாடினார். அவருக்கு கரும்பு கொடுத்து, விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின், விஜயேந்திரா பேசியதாவது:
கரும்பு விவசாயிகளுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடியது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். விவசாயிகள் போராட்டத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும். கரும்புகளை எடை போடும் போது, விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். வெயிலில் வேர்வை சிந்தி கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளை, பா.ஜ., கைவிடாது.
விவசாயிகளை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால், எனது இதயமே நொறுங்கி விட்டது. 'விவசாயிகள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பணக்காரர்கள்' என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா எப்போதும் கூறுவார். அது உண்மை என்று நிரூபணம் ஆகி உள்ளது. இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ., அல்லது அரசியல்வாதியாக கலந்து கொள்ளவில்லை. விவசாயிகளில் ஒருவனாக வந்துள்ளேன்.
இவ்வாறு பேசினார்.
சோள ரொட்டி இதற்கி டையில், விவசாயிகள் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசை கண்டித்து, பெலகாவி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் போராட்டம் சூடுபிடித்தது. கர்நாடக ரக் ஷன வேதிகே நாராயண கவுடா பிரிவினர், பெலகாவி சுவர்ண விதான் சவுதா முன்பு செல்லும் தேசிய நெடுஞ்சாலயில் மறியல் போராட்டம் நடத்தினர். டயர்களுக்கு தீ வைத்தனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது ஏறி, அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சாலை மறியல் காரணமாக, வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதையடுத்து, சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
ராய்பாக் தாலுகா முகலகோடா கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிகள், குர்லாபுராவில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வழங்க, தங்கள் வீடுகளில் சோள ரொட்டி தயாரித்து எடுத்து வந்தனர்.
பெலகாவி மாவட்டத்தில் போராட்டம் தீவிரம் அடைவதால், மாநில காங்., அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு
விவசாய அமைச்சர் செலுவராயசாமி அளித்த பேட்டி: பெலகாவியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது பற்றி, நாளை (இன்று) நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். அவர்கள் போராட்டம் நியாயமானது. 1 டன் கரும்புக்கு 3,500 ரூபாய் வழங்க மாநில அரசு ஒப்பு கொண்டாலும், மத்திய அரசு தான் இறுதி விலையை நிர்ணயிக்க வேண்டும். அரசியல் செய்ய விஜயேந்திரா, பெலகாவி சென்று உள்ளார். அவரது தந்தை முதல்வராக இருந்த போது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படி கேட்ட போது, 'பணம் அடிக்கும் இயந்திரம் உள்ளதா' என்று கேட்டார். இப்போது விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் போல நாடகம் போடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

