UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 07:32 PM
பெலகாவி: தீப்பிடித்ததில், 28 ஏக்கரில் விளைந்திருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கரும்பு எரிந்து கருகின.
பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், இங்களகாவ் கிராமத்தில் விவசாயிகள் பசப்பா சென்னண்ணவரா, ஈரப்பா, குருபசு தேவரமனி, சனகவுடா ராச்சன உட்பட பலருக்கு சொந்தமான, 28 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. செழிப்பாக வளர்ந்து அறுவடைக்கு கரும்பு, தயார் நிலையில் இருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை, திடீரென தென்பட்ட தீப்பொறி, காற்றின் வேகத்தால் கரும்பு பயிர்களை கபளீகரம் செய்தது. தகவல் அறிந்து வந்த கிராமத்தினர், ஊர்மக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தினர்.
இதனால் விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கரும்பு தீக்கிரையானது. தீக்கிரையான கரும்பு பயிரை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
