ADDED : மே 23, 2026 04:07 AM
ஓராண்டு கஷ்டம் நீங்குகிறது: தங்கவயல் மக்கள் மகிழ்ச்சி
தங்கவயலில் இருந்து ஏராளமானோர் குடிபெயர்ந்து பெங்களூரில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள இடங்களில் தான் அவர்கள் குடியிருக்கின்றனர்.
குறிப்பாக காக்ஸ் டவுன், பிரேசர் டவுன், பாட்டரி டவுன், டேனரி ரோடு, பில்லண்ணா கார்டன், பெரியார் நகர், காச்சரகானஹள்ளி, லிங்கராஜபுரம், கே.ஜி. ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி, மாருதி சேவா நகர் என பல இடங்களில் உள்ளனர்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காமல் போனதால் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இப்பகுதியில் தான் தங்கவயலை சேர்ந்த ஏராளமானோர் பல வேலைகளை பார்த்து வந்தனர். இதற்காக தினமும் தங்கவயலில் இருந்து பயணம் செய்து வந்தனர்.
இங்கு ரயில்கள் நிற்காததால், கே.ஆர்.புரம் அல்லது கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இறங்க மற்றும் ஏற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இதனால் கூடுதலாக 100 ரூபாய் வரை செலவானது.
மீண்டும் அனைத்து மெமு ரயில்களும் பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதால், தங்கவயலை சேர்ந்த பயணியர் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஓராண்டுக்கும் அதிகமாக பட்ட கஷ்டத்துக்கு பெரிய தீர்வு கிடைத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
