/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' பா.ஜ., கையில் 'புது ரூட்'
/
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' பா.ஜ., கையில் 'புது ரூட்'
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' பா.ஜ., கையில் 'புது ரூட்'
எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' பா.ஜ., கையில் 'புது ரூட்'
ADDED : மே 20, 2025 11:51 PM
'ஹனிடிராப்' விவகாரத்தின் மீது விசாரணை கோரி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் காதர் மீது காகிதங்களை கிழித்து வீசினர். இதனால், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், கவர்னரை சந்தித்து மனு அளித்தார். அதன்பின் பல போராட்டங்களை நடத்தினார். ஆனால், இவை எதுவும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் உத்தரவை நீக்க கோரி சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் புது ரூட்டை கையில் எடுத்து உள்ளதாக தெரிகிறது.
இதற்காக அவர் சட்டப் போராட்டம் நடத்த உள்ளார். புரியும் படி சொல்ல வேண்டுமென்றால், கோர்ட்டுக்கு போக உள்ளார். அதுவும் வேலைக்காகவில்லை என்றால், பெங்களூரில் செப்டம்பரில் நடக்க உள்ள அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் போது, சபாநாயகருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என கூறி உள்ளார்.
இம்மாநாட்டின் போது, லோக்சபா சபாநாயகர் உட்பட பல மாநில சபாநாயகர்கள் கலந்து கொள்வர். அப்போது, போராட்டம் நடத்துவதன் மூலம், காதருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது. இதை தவிர்க்க, காதர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வார் என அரவிந்த் பெல்லத் மன கணக்கு போட்டு உள்ளார். இந்த நடவடிக்கை பலன் அளிக்குமா, அளிக்காதா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இது குறித்து அரவிந்த் பெல்லத் கூறுகையில், ''சபாநாயகர் காதர் எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது பாரபட்சமான நடவடிக்கை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டது. காதரை கண்டித்து பா.ஜ., சட்டப் போராட்டம் நடத்தும். இந்த விவகாரத்தை தேசிய அளவிற்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.
- நமது நிருபர் -