/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாலுகா பஞ்சாயத்து பொருட்கள் 'ஜப்தி'
/
தாலுகா பஞ்சாயத்து பொருட்கள் 'ஜப்தி'
ADDED : டிச 16, 2025 05:23 AM
ராய்ச்சூர்: குடிநீர் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு, பயன்படுத்தப்பட்ட பொருட்களின் வாடகை பில் தொகையை அளிக்காமல் இழுத்தடித்த, தாலுகா பஞ்சாயத்து அலுவலக பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின், பொத்தாளா கிராமத்தில் ராமகிருஷ்ணா என்பவர், 'பாலாஜி ஹார்டுவேர்' கடை வைத்துள்ளார். 2022ல் மான்வி தாலுகாவின், உடகநுார் கிராம பஞ்சாயத்து சார்பில் நடந்த, குடிநீர் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு தேவையான பொருட்களை, ராமகிருஷ்ணாவிடம் வாடகைக்கு பெறப்பட்டது.
இதற்காக 6.02 லட்சம் ரூபாய் கட்டணம் தர வேண்டி இருந்தது. ஆனால் மூன்றாண்டுகளாகியும் பணத்தை தராமல் இழுத்தடித்தது.
இது குறித்து, ராமகிருஷ்ணா ராய்ச்சூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், ராமகிருஷ்ணாவுக்கு சேர வேண்டிய தொகையை அளிக்காவிட்டால், உடகநுார் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தின் பொருட்களை, ஜப்தி செய்யும்படி நடப்பாண்டு நவம்பரில் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னும், பில் தொகையை வழங்காத காரணத்தால், கிராம பஞ்சாயத்து அலுவலக பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
அப்போதும் பில் தொகை வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தை ராமகிருஷ்ணா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அதிருப்தி அடைந்த நீதிமன்றம், மான்வி தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்யும்படி, நேற்று உத்தரவிட்டது. இதன்படி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், இருக்கைகள், மேஜைகள் உட்பட, பல்வேறு பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.

