ADDED : ஏப் 26, 2026 11:54 PM
பெங்களூரு: தமிழகம் மற்றும் கேரள மாணவர்கள் இடையே, மோதலில் கத்திக்குத்து விழுந்தது.
கேரளாவை சேர்ந்த இர்பான் முகமது மற்றும் அவரது நண்பர்கள், பெங்களூரின், டி.ஜான் கல்லுாரியில், வெவ்வேறு கோர்ஸ்களில் நான்காவது செமஸ்டர் படிக்கின்றனர். கோனனகுன்டேவின் பவமானா நகரில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். ஏப்ரல் 17ம் தேதி இரவு, இர்பான் முகமது, இவரது நண்பர்கள் ஆதர்ஷ், டார்வின் வீட்டில் இருந்தனர்.
இரவு 10:25 மணியளவில், ஆறு பேர் கொண்ட கும்பல், அந்த வீட்டுக்குள் புகுந்தனர். பணம் கேட்டு மிரட்டினர். அங்கிருந்தோரை கத்தியால் குத்தினர். நான்கு மொபைல் போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறித்து கொண்டு தப்பினர்.
கோனனகுன்டே போலீ சார் விசாரித்து, தமிழகத்தை சேர்ந்த நவீன் குமார், குமாரன், விமல்ராஜ், அபிநேஷ், கலைவேந்தன், பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இர்பானும், அபிநேஷும் ஒரே கல்லுாரியில் படிக்கின்றனர்.
சமீபத்தில் ஏதோ காரணத்தால், இவர்களுக்குள் தகராறு நடந்தது. அப்போது கேரள மாணவர்கள், அபிநேஷை தாக்கினர். இதற்கு பழி வாங்கும் நோக்கில், அபிநேஷ் தமிழகத்தில் இருந்து, தன் நண்பர்களை பெங்களூருக்கு வரவழைத்தார். கேரள மாணவர்களை தாக்கி, கொள்ளையடிக்க செய்ததை ஒப்புக்கொண்டார்.
