/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விபத்து வழக்கில் தமிழக அரசு பஸ் ஜப்தி
/
விபத்து வழக்கில் தமிழக அரசு பஸ் ஜப்தி
ADDED : ஏப் 03, 2025 07:32 AM

ராம்நகர் : விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால், தமிழக அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கர்நாடகாவின் ராம்நகரை சேர்ந்தவர் நந்தீஷ். இவர், 2016ம் ஆண்டு சொந்த வேலையாக தன் காரில் தமிழகத்தின் திண்டுக்கல் சென்றார்.
வட்டம்சத்திரம் - சம்பட்டி சாலையில் காரில் சென்றபோது எதிரே வந்த தமிழக அரசு பஸ், கார் மீது மோதியது. இந்த விபத்தில் நந்தீஷ் உயிரிழந்தார்.
நஷ்டஈடு கேட்டு நந்தீஷ் குடும்பத்தினர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2019ல் இந்த வழக்கு, ராம்நகர் மூன்றாவது கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி தேவராஜ் பட், 2023ல் தீர்ப்பு கூறினார். நந்தீஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 20.05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால் போக்குவரத்துக் கழகம், நந்தீஷ் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கவில்லை. இதுபற்றி நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் தமிழக அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி பெங்களூரில் இருந்து மைசூரு வழியாக ஊட்டி சென்ற, தமிழக அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். அந்த பஸ்சில் பயணம் செய்த பயணியர், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.