ADDED : மே 23, 2026 03:54 AM
மடிவாளா: லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்த, தமிழக நபர் சந்தேகத்திற்கிடமான விதத்தில் இறந்து கிடந்தார்.
தமிழகம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்தவர் முருகன், 35. திருமணமாகாத இவர், தன் தாயுடன் வசித்தார்; கார்மென்ட்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றினார்.
சில நாட்களுக்கு முன், பணி நிமித்தமாக, தனியாக பெங்களூரு வந்த முருகன், மடிவாளா அருகில், மாருதி நகரில் உள்ள 'கோல்டன் நெக்ஸ்ட்' என்ற லாட்ஜில் தங்கியிருந்தார்.
இவர் இரண்டு நாட்களாக, அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், நேற்று முன் தினம் கதவை தட்டியும் திறக்கவில்லை. எனவே, மடிவாளா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, முருகன் படுக்கையில் இறந்து கிடந்தார்.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையை துவங்கியுள்ளனர்.
மடிவாளா போலீசார் கூறியதாவது:
சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த முருகனுக்கு இரண்டு முறை லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியும். விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
