பெங்., மத்திய மாவட்ட தலைவராக தமிழர் சரவணன் பொறுப்பேற்பு
பெங்., மத்திய மாவட்ட தலைவராக தமிழர் சரவணன் பொறுப்பேற்பு
ADDED : செப் 29, 2026 03:39 AM

சிவாஜி நகர்: பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக, தமிழரான சரவணன் நேற்று பொறுப்பேற்றார்.
கர்நாடகாவில் 35 மாவட்டங்களுக்கு புதிய காங்கிரஸ் தலைவர்களை கட்சி மேலிடம் அறிவித்திருந்தது.
இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள காந்தி நகர் பிளாக் காங்கிரஸ் தலைவரும், தமிழருமான சரவணன், பெங்களூரு மத்திய மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பாரத் ஜோடோ அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற சரவணனுக்கு, கட்சி கொடியை மாநில தலைவர் ஹரிபிரசாத், அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், முன்னாள் அமைச்சர் தினேஷ் குண்டுராவ், ராஜ்யசபா எம்.பி., மன்சூர் அலிகான் ஆகியோர் வழங்கினர்.
சரவணன் பேசுகையில், ''அடிமட்ட தொண்டனுக்கு மிகப்பெரிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அடுத்த சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த இன்று முதலே அனைவரும் உழைக்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களுக்கு செண்டை மேளம் முழங்கவும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் சம்பத், பெங்களூரு மத்திய மாவட்ட துணைத் தலைவர் ஜி.சம்பத், அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் தென் மாநில ஒருங்கிணைப்பாளர் பையப்பனஹள்ளி ரமேஷ், பாரதிநகர் பிளாக் காங்., தலைவர் சுபாஷ், ஹலசூரு வார்டு தலைவர் பரத் ரெட்டி, லிட்டில் பிளவர் பள்ளி செயலர் மதுசூதனபாபு, காந்தி நகர் தொகுதி காங்கிரசார், தமிழர்கள் பலரும் சரவணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
