துணை நகர திட்டம் வாயிலாக ரூ.33,562 கோடி ஈட்ட இலக்கு
துணை நகர திட்டம் வாயிலாக ரூ.33,562 கோடி ஈட்ட இலக்கு
ADDED : மே 03, 2026 02:02 AM
பெங்களூரு: பெருநகர பெங்களூரு ஆணையம் வகுத்துள்ள, புறநகர் நகரமைப்பு திட்டம், அரசுக்கு கூடுதலாக 15,429 கோடி ரூபாய் வருவாயை ஈட்டித்தரும் என, கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பிடதி துணை நகர திட்டம் என அழைக்கப்பட்ட, புறநகர் நகரமைப்பு திட்டத்தை பெருநகர பெங்களூரு ஆணையம் கையில் எடுத்துள்ளது.
இந்த திட்டம் குறித்து, இ.பி.ஏ., அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
இந்த திட்டத்திற்கு உட்பட்ட நிலங்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டத்திற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு 9,693 வீட்டுமனைகள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தவிர, 8,723 வணிக மனைகளாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இவற்றில் தொழில்துறை பயன்பாட்டிற்கு ஒரு சதுர அடி 2,200 ரூபாயாகவும், வணிக பயன்பாட்டிற்கு, 2,300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இழப்பீடு, கட்டாய பசுமை இடங்களை ஒதுக்கிய பிறகு, நில மேம்பாட்டிற்காக, 44.5 சதவீத நிலம் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்த மொத்த நிலத்தையும் விற்பனை செய்வதன் மூலமும், சொத்துவரி, பிரீமியம் எப்.ஏ.ஆர்., எனும் கட்டுமான அனுமதிக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் வருவாய் ஆதாரங்கள் மூலமும், நிதி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. திட்டத்திற்காக, 18,133 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக அரசுக்கு, 33,562 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மனைகள் விற்பனை மூலம் 22,654 கோடி ரூபாயும், சொத்து வரி மூலம் 5,739 கோடி ரூபாயும், பிரீமியம் எப்.ஏ.ஆர் மூலம் 5,169 கோடி ரூபாயும் கிடைக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தில் பி.டி.ஏ., என்ற பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்யும். அதற்கு பதிலாக, 551 ஏக்கர் மேம்படுத்தப்பட்ட நிலம் அதற்கு வழங்கப்படும்.
தவிர, நிதி நிறுவனங்கள் மற்றும் ஹட்கோ மூலம் 7,500 கோடி ரூபாயும், பொது வசதி இடங்களை அடமானம் வைப்பதன் மூலம் 3,650 கோடி ரூபாயும் திரட்ட ஜி.பி.ஏ., திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
