/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியை அறைந்த டாக்சி டிரைவர் கைது
/
மாணவியை அறைந்த டாக்சி டிரைவர் கைது
ADDED : அக் 25, 2025 11:04 PM
பெங்களூரு: கல்லுாரி மாணவியின் கன்னத்தில் அறைந்த டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த 19 வயது மாணவி, பெங்களூரில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த 20ம் தேதி கெம்பே கவுடா விமான நிலையம் செல்வதற்காக, தனியார் செயலி மூலம் கார் முன்பதிவு செய்தார்.
அப்போது, போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள சாலையில் செல்வதற்குமான சுங்க கட்டணத்தையும் செலுத்திவிட்டார்.
அதன்பின், டாக்சியில் ஏறி பயணத்தை துவக்கினார். பின்னர், டாக்சி டிரைவர், போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள சுங்கச்சாவடி சாலை வழியாக செல்லாமல், கட்டணம் ஏதுமின்றி இலவசமாக செல்லும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சாலையில் செல்ல முயன்றார். இதன் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை லாவகமாக கைப்பற்ற முயற்சித்துள்ளார்.
இதையறிந்த மாணவி, டாக்சி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காரின் கீழே இறங்கி இருவரும் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஆத்திரமடைந்து மாணவியின் கன்னத்தில் டிரைவர் அறைந்துவிட்டு, காரில் தப்பிச் சென்றார். இதுகுறித்து மாணவியின் மாமா கெம்பே கவுடா விமான நிலைய போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் வண்டியின் நம்பர் பிளேட் கண்டறியப்பட்டது. இதன் மூலம் வண்டியின் டிரைவர், கேரளாவை சேர்ந்த அஜாஸ், 31, என அடையாளம் காணப்பட்டார்.
அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், சம்பவம் நடந்த அன்று, அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

