ADDED : மே 20, 2026 11:05 PM

- நமது நிருபர் -
சிக்கமகளூரு என்றால், நம் கண் முன்னே தோன்றுவது காபி தோட்டங்கள் தான். பசுமையான தோட்டங்கள் நிறைந்துள்ள காரணத்தால், சுற்றுலா பயணியரை தன் வசம் சுண்டி இழுக்கிறது. தற்போது சிக்கமகளூரில் தேயிலை தோட்டங்களும் அதிகரிப்பதால், பூலோக சொர்க்கமாக திகழ்கிறது.
காபி, நம் வாழ்க்கையில், பிரிக்க முடியாத அங்கம். தினமும் காலை சூடாக காபி குடித்தால் தான், அன்றைய பொழுது நல்ல முறையில் துவங்கும். வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு, முதலில் காபி கொடுத்து உபசரிப்பது, நம் கலாசாரம்.
கர்நாடகாவின், சிக்கமகளூரு மாவட்டத்தில், காபி மிக அதிகமாக விளைகிறது. இதனால் இந்த மாவட்டத்தை, 'காபி நாடு' என, அழைக்கின்றனர். இது விவசாயிகளின், பொருளாதா வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிக்கமகளூரின் கொப்பா, சிருங்கேரி உட்பட, அனைத்து தாலுகாக்களிலும், காபி தோட்டங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் லட்சக்கணக்கான ஏக்கரில், காபி விளைகிறது. பல காலமாக இதுவே முக்கியமான வர்த்தக விளைச்சலாக உள்ளது.
சிக்கமகளூரில் உயரமான மலைகள், பசுமையான நீர் வீழ்ச்சிகள், இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் அடர்ந்த வனங்களுக்கு பஞ்சமே இல்லை. இவை போன்று, கண்களை, மனதை குளிர வைக்கும் காபி தோட்டங்களும், சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன.
இதற்கு முன், காபி தோட்டங்கள் மட்டுமே நிறைந்திருந்த சிக்கமகளூரில், தற்போது ஆங்காங்கே தேயிலை தோட்டங்களும், மனதை மகிழ்விக்கின்றன. இங்குள்ள மண்ணின் வளம், சூழ்நிலை தேயிலை விளைச்சலுக்கும் அனுகூலமானது என்பதை, விவசாயிகள் உணர்ந்துள்ளனர். அதனால், அதிக அளவில் தேயிலையை விளைவிக்கின்றனர்.
மேலும், மலைப்பகுதி, இறக்கமான பகுதிகளில் தேயிலை பயிரிடுவது எளிது என்பதால், பலரும் தேயிலை விளைவிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பனி படர்ந்த சூழ்நிலை, அதிக மழை, குளிர்ச்சியான வானிலை தேயிலைகளின் தரத்தை, மேலும் அதிகரிக்கிறது. மாநிலம் மட்டுமின்றி, தேசிய, சர்வதேச அளவில் தேயிலைக்கு தேவை உள்ளது. நஷ்டம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எனவே, விவசாயிகள் தேயிலை பயிரிடுகின்றனர்.
ஹாசன், குடகு, சிக்கமகளூரு மாவட்டங்கள், காபி விளைச்சலுக்கு பிரசித்தி பெற்றவை என்றாலும், சமீப ஆண்டுகளாக சிக்கமகளூரின், பல இடங்களில் தேயிலை தோட்டங்கள், மனதை கொள்ளை கொள்கின்றன.
களசா, ஹொரநாடு, குதுரேமுக் பாதைகளில் வாகனத்தில் பயணிப்போரை, பசுமையான தேயிலை தோட்டங்கள் மகிழ்விக்கின்றன. இயற்கையின் படைப்பை கண்டு ஆச்சர்யம் அடைகின்றனர்.
களசாவின், களசேஸ்வரா கோவில், ஹொரநாடுவின் அன்ன பூர்ணேஸ்வரி கோவில், குதுரேமுக் போன்ற இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணியர், கெளகூரு தேயிலை தோட்டம் வழியாக தான் பயணிக்க வேண்டும். வாகனத்தை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் தோட்டத்தின் அழகை ரசித்த பிறகே, பயணத்தை தொடர்வதை, தினமும் காணலாம். இளைஞர்கள், இளம் பெண்கள், சுற்றுலா பயணியர் தேயிலை தோட்டத்தின் நடுவே விதவிதமான போஸ்களில், போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். சோஷியல் மீடியாக்களிலும், இத்தகைய காட்சிகள் அதிகம் வைரலாகின்றன.
சிக்கமகளூருக்கு வருவோரின், சுற்றுலா இடங்களின் பட்டியலில், தற்போது தேயிலை தோட்டங்களும் இடம் பிடித்துள்ளன. பச்சை நிற பட்டுச்சேலையில், அழகான வெண் புள்ளிகள் இருப்பதை போல, பசுமையான தேயிலைகளின் பனித்துளிகள் படர்ந்திருப்பதை காண்பது, புதிய அனுபவத்தை அளிக்கிறது.
அதிகாலையில் பனி மூட்டத்தில், உடலை வலிக்காமல் வருடி செல்லும், குளிர்ச்சியான காற்றை சுவாசித்தபடி, தேயிலை தோட்டத்தின் நடுவே, நடந்து செல்வது அற்புதமான அனுபவம். தேயிலையின் நறுமணம் மனதை மயக்கும். சொர்க்கமே தரையிறங்கி பூலோகத்துக்கு வந்து விட்டதா என, எண்ண தோன்றும்.
சுற்றுலா பயணியருக்கு மட்டுமின்றி, திரையுலகினரையும் தேயிலை தோட்டங்கள் கவர்ந்துள்ளன. இங்கு பல்வேறு மொழிகளின் திரைப்பட படப்பிடிப்பு நடக்கின்றன. இந்த காட்சிகளை சினி ரசிகர்களை மகிழ்விக்கிறது.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிக்கமகளூரு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி, குதுரேமுக் போன்ற, சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில், அதிகமான தேயிலை தோட்டங்களை காணலாம்.
இதற்கு முன் காபி விளைச்சலுக்கு, பிரசித்தி பெற்றிருந்த சிக்கமகளூரு மாவட்டம், இப்போது தேயிலை விளைச்சலிலும் பிரசித்தி பெற்றிருப்பது, மகிழ்ச்சியான விஷயம்.
தேயிலை பயிரிட மிகவும் உயரமான மலைப்பகுதிகள், விசாலமான நிலம் தேவை. களசா மற்றும் ஹொரநாடு பகுதிகளில், இத்தகைய இடங்கள் உள்ளன. எனவே, இங்கு தேயிலை பயிரிடுகின்றனர். சுற்றுலா பயணியருக்கு மகிழ்ச்சி அளிக்கும் இடமாக உள்ளது.
சிக்கமகளூருக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், காபி தோட்டங்களுடன், தேயிலை தோட்டங்களையும் கண்டு ரசிக்கின்றனர். விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது.
விவசாயிகள் பலரும், பணம் பெற்று கொண்டு, தோட்டத்தை பாழாக்க கூடாது என்ற நிபந்தனையுடன் போட்டோ, வீடியோ ஷூட் நடத்த, திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த, அனுமதி அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
