UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 11:14 PM
மாண்டியா: மாணவியரின் மொபைல் போனுக்கு, ஆபாசமாக, ‘மெசேஜ்’ அனுப்பி, தொந்தரவு கொடுத்த பேராசிரியரை, மாணவியர் நேற்று அடித்து துவைத்தனர்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களா நகரில் அரசு பட்டப்படிப்பு கல்லுாரி பேராசிரியர் கங்கூ, 48. இவர், மாணவியரின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு, அவர்களில் சில மாணவியருக்கு, ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ சின்னு’ என, அடிக்கடி மெசேஜ் அனுப்பினார். அவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் கோபமடைந்த மாணவியர், நேற்று மதியம் அலுவலக அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த பேராசிரியர் கங்கூவை திட்டியதுடன், தாக்கவும் செய்தனர். தன்னை விட்டு விடும்படி, கை கூப்பி மன்றாடியும், மாணவியரின் கோபம் தணியவில்லை.
மாணவியரிடம் அவர் அடிவாங்குவதை, சிலர் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்ததால், பீதியடைந்த கங்கூ, முகக்கவசம் அணிந்து கொண்டார்.
இதை பார்த்த மாணவியர், அவரை எச்சரித்து விட்டு, அங்கிருந்து சென்றனர்.
