தடை! 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த...
தடை! 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த...
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 11:14 PM
பொதுவாக படிப்பில் மந்தமாக உள்ள மாணவர்களை, பெற்றோர் கோச்சிங் சென்டர்களில் சேர்ப்பது வழக்கம். இங்கு பயிற்சி பெற்றால், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவர் என்பது, மக்களின் எண்ணமாகும்.
ஆசிரியர்களின் ஆலோசனைப்படி, பிள்ளைகளை கோச்சிங் சென்டர்களில் சேர்க்கின்றனர்.
பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், கோச்சிங் சென்டர்கள் செயல்படுகின்றன. சில பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் தனியாக, ஓய்வு நேரத்தில், கோச்சிங் சென்டர்கள் நடத்துவதும் உண்டு.
இதில் சேரும்படி மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சம்பவங்களும், ஆங்காங்கே நடக்கின்றன. வகுப்புகளில் சரியாக பாடம் நடத்தாமல், கோச்சிங் சென்டர்களில் சேர, மாணவர்களை துாண்டுகின்றனர்.
மாணவர்கள் ஓய்வெடுக்க நேரம் தராமல், அதிக நேரம் படிப்பில் ஈடுபடுத்துகின்றனர். இது அவர்களின் மன நலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை, பாதிக்க செய்கிறது.
தேர்வு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், நள்ளிரவு வரையிலும், அதிகாலையிலும் வகுப்புகளை நடத்துகின்றனர். அது மட்டுமின்றி, அதிகமான கட்டணமும் வசூலிக்கின்றனர். இது, ஏழை மாணவர்களுக்கு, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
இதை கவனித்த கர்நாடக அரசு, இத்தகைய கோச்சிங் சென்டர்களுக்கு, கடிவாளம் போட முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய விதிமுறைகள் வகுத்துள்ளது.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தின் கோச்சிங் சென்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவற்றில் அட்மிஷன் பெறும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. கோச்சிங் சென்டர்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் சென்டர்களுக்கு அதிகமான மாணவர்கள் வர வேண்டும் என, நினைக்கின்றன.
இதே காரணத்தால், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இதை கட்டுப்படுத்தவும், கோச்சிங் சென்டர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், மாநில அரசு புதிய விதிமுறைகள் வகுத்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், கோச்சிங் சென்டர்களுக்கு, நேரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சென்டர்கள், காலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை மட்டுமே, செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு கோச்சிங் சென்டரிலும், மன நல ஆலோசகரை நியமிக்க வேண்டும். 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களை, பத்தாம் வகுப்பு நிறைவு செய்யாத மாணவர்களை, கோச்சிங் சென்டர்களில் சேர்த்து கொள்வதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோச்சிங் கட்டணத்தை, முழுமையாக செலுத்தும்படி மாணவர்களின் பெற்றோருக்கு, கோச்சிங் சென்டர்களை நடத்தும் உரிமையாளர்கள் அழுத்தம் கொடுக்க கூடாது.
குறைந்தபட்சம் நான்கு தவணைகளில் கட்டணம் செலுத்த, வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை மாணவர்கள், பாதியில் கோச்சிங்கை நிறுத்தினால், மிச்ச நாட்களுக்கான கட்டணத்தை, 10 நாட்களுக்குள் கோச்சிங் சென்டர்கள் திருப்பித்தர வேண்டும்.
முறைப்படி பதிவு செய்யாத, விதிமுறைகளை பின்பற்றாத கோச்சிங் சென்டர்களுக்கு, பெரும் தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.
அதிகபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், கோச்சிங் சென்டருக்கும் ‘சீல்’ வைக்கப்படும். இந்த வரைவு விதிமுறைகள் குறித்து, பொதுமக்கள் 15 நாட்களுக்குள், தங்களின் ஆலோசனைகள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
