/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணத்திற்கு 18 நாட்களுக்கு முன் ஆசிரியை தற்கொலை
/
திருமணத்திற்கு 18 நாட்களுக்கு முன் ஆசிரியை தற்கொலை
திருமணத்திற்கு 18 நாட்களுக்கு முன் ஆசிரியை தற்கொலை
திருமணத்திற்கு 18 நாட்களுக்கு முன் ஆசிரியை தற்கொலை
ADDED : ஏப் 22, 2025 05:08 AM

கதக்: திருமணம் நெருங்கி வரும் சூழலில் புகைப்படங்களை வெளியிடுவதாக முன்னாள் காதலன் மிரட்டியதால், உடற்பயிற்சி ஆசிரியை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கதக் மாவட்டம், அசுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாயிரா பானு, 29; தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவரும், இதே கிராமத்தைச் சேர்ந்த மைலாரி என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு காதலித்தனர். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
அதன் பின், சாயிரா பானுவின் பெற்றோர், அவருக்கு திருமண ஏற்பாடு செய்தனர். மே 8ம் தேதி அவருக்கு திருமணம் செய்ய தேதி நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்துக்கான பொருட்கள் வாங்க, அவரின் பெற்றோர், நேற்று முன்தினம் கடைக்கு சென்றிருந்தனர்.
மிரட்டல்
இதையறிந்த முன்னாள் காதலன், சாயிராபானுவை தொடர்பு கொண்டு, 'என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், காதலித்தபோது நாம் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சாயிராபானு, துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த பெற்றோர், மீண்டும் வீடு திரும்பினர். அப்போது மகள் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற கதக் ரூரல் போலீசார், தற்கொலைக்கு முன், சாயிராபானு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
கடிதத்தில், 'என் தற்கொலைக்கு முன்னாள் காதலன் மைலாரி தான் காரணம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம். ஒரு மாதத்துக்கு முன்பு, இன்ஸ்டாகிராமில் என்னை தொடர்பு கொண்ட அவர், என் பிறந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்தார்.
'உனக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்' என்று கூறினார்.
'தற்போது, நாங்கள் பழகியபோது எடுத்த புகைப்படம், வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டுகிறார்.
'குடும்பத்தின் மரியாதையை காப்பாற்ற, தற்கொலை செய்து கொள்கிறேன். என் பெற்றோர் எந்த விதத்திலும் தொந்தரவுக்கு ஆளாகக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
மைலாரி மீது இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனையான சாயிராபானு, தேசிய அளவிலான போட்டிகளில் வென்று மாநிலத்துக்காக பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளார்.
குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டது, அக்குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.