ADDED : மார் 23, 2026 01:43 AM

மங்களூரு: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, மற்றொரு பெண் பாலியல் புகார் அளித்து உள்ளார்.
தட்சிணகன்னடா மாவட்டம், மூடபிதரேவை சேர்ந்த ஒரு பெண்ணின் கணவரை, மூடபிதரே போலீசார் கைது செய்தனர். தன் கணவர் மீது பொய்யான வழக்கு பதிவானதால், அவரை விடுவிக்கும்படி மனைவி வேண்டுகோள் விடுத்தார்.
கணவரை விடுவிக்க வேண்டுமென்றால், 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் சந்தேஷ் கேட்டு உள்ளார்; பணம் இல்லையென்றால் தன் இச்சைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியும் உள்ளார். இது குறித்து, முதல்வர் சித்தராமையா, மகளிர் ஆணையத்தில் சில நாட்களுக்கு முன் அப்பெண் புகார் செய்தார்.
இதை அறிந்த மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டிக்கு கடிதம் எழுதினார்.
இதன்படி, இன்ஸ்பெக்டர் சந்தேஷ் கடந்த 17ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணையில், இன்ஸ்பெக்டருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஆசிரியை, இன்ஸ்பெக்டர் சந்தேஷ் மீது வேனுார் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்துள்ளார். '2018 முதல் 2023 வரை பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்; 16 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்தார்.
'புகார் அளித்தால் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்' என கூறியுள்ளார். இதையடுத்து, சந்தேஷ் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
