/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியர் கர்ப்பம் கர்நாடகாவில் அதிகரிப்பு
/
சிறுமியர் கர்ப்பம் கர்நாடகாவில் அதிகரிப்பு
ADDED : செப் 29, 2025 06:43 AM
ஷிவமொக்கா : கர்நாடகாவில் சிறுமியர் கர்ப்பம் அடைவது அதிகரித்து வருவதாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு மைய அதிகாரி மஞ்சுநாத் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகாவில் குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களால் சிறுமியர் கர்ப்பமாவது அதிகரித்து வருகிறது. அதிலும், ஷிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 55 சிறுமியர் கர்ப்பமாகி உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு மைய அதிகாரி மஞ்சுநாத் கூறியதாவது:
கர்நாடகாவில் சிறுமியர் கர்ப்பமடைவதில், ஷிவமொக்கா முன்னிலை வகிக்கிறது. இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 55 சிறுமியர் கர்ப்பமாகி உள்ளனர். பெற்றோரிடையே, 'போக்சோ' வழக்கு குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாதது, குழந்தை திருமணம் அதிக எண்ணிக்கையில் நடப்பதற்கு காரணமாக உள்ளது. இதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அவ்வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஷிவமொக்காவில் கடந்த 2024 ஏப்ரல் முதல் மார்ச் 2025 வரை குழந்தை திருமணம் தொடர்பாக 117 புகார்கள் பெறப்பட்டன. இதில், 38 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டன; 79 குழந்தை திருமணங்கள் நடந்தன. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 231 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காதல் விவகாரம் தொடர்பாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போக்சோ வழக்கில் சிக்கினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளிடம் நல்ல தொடுதல், தவறான தொடுதல் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெண் பிள்ளைகள் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சரியான நேரத்தில் வருகின்றனரா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.