ADDED : மே 16, 2026 03:32 AM
ஹாசன்: ஹாசனில் உடற்பயிற்சி கூடத்தில் தெரியாமல் மோதியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தலையில் பலமாக கையால் குத்தியதில் ஒருவர் 'கோமா' நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹாசன் நகரை சேர்ந்தவர் கீர்த்தன், 24. இங்குள்ள, 'எம்.ஜே., பிட்னஸ்' என்ற உடற்பயிற்சி கூடத்தில், தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார். இங்கு பலரும் உடற்பயிற்சிக்கு வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி, வழக்கம் போல உடற்பயிற்சியில் பலரும் ஈடுபட்டிருந்தனர். கீர்த்தன் நடந்து செல்லும் போது, எதிரே வந்த வருண் என்பவரின் தோளை உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சலடைந்த வருண், கீர்த்தனை பார் த்து, ஒழுங்காக செல்ல மாட்டாயா... என கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, முற்றியது. இதில், கோபமடைந்த வருண், கீர்த்தனின் முகத்தில் ஓங்கி கையால் குத்தினார்.
நிலைகுலைந்த கீர்த்தன் அங்கேயே விழுந்தார். அருகில் இருந்த மற்றவர்கள், அவரை துாக்கி நிற்க வைத்தனர். ஆனால், அவரால் நின்று பேச முடியாமல் திணறினார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, ஸ்கேன் செய்து பார்த்த போது, கீர்த்தனின் மண்டை ஓட்டில் லேசான விரிசல் ஏற்பட்டதுடன், ரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்தது. அதற்குள் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார். அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடி வருகிறார்.
ஹாசன் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
