/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானம் விரைவில் ஒப்படைக்கப்படும்: ஹெச்.ஏ.எல்.,
/
விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானம் விரைவில் ஒப்படைக்கப்படும்: ஹெச்.ஏ.எல்.,
விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானம் விரைவில் ஒப்படைக்கப்படும்: ஹெச்.ஏ.எல்.,
விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானம் விரைவில் ஒப்படைக்கப்படும்: ஹெச்.ஏ.எல்.,
ADDED : பிப் 13, 2025 01:41 AM
பெங்களூரு: 'தேஜஸ் போர் விமானத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்' என, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் முதல் 2028, பிப்ரவரிக்குள் விமானங்களை தயாரித்து, மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
எனினும், ஒப்பந்தத்தின்படி இதுவரை விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.
இதை நம் விமானப்படையின் தலைமை தளபதி வெளிப்படையாகவே விமர்சித்தார்.
இந்நிலையில் ஹெ.ஏ.எல்., நிர்வாக இயக்குநர் டி.கே.சுனில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நம் ராணுவத்துக்கு, 97 'தேஜஸ் மார்க் 1ஏ' இலகுரக போர் விமானங்கள் மற்றும் 156 'பிரச்சந்த்' இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களின் மதிப்பு 1.30 லட்சம் கோடி ரூபாய். அடுத்த 12 மாதத்தில், 1.65 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் உள்ளன.
நிலுவையில் உள்ள 'சுகோய் எஸ்.யு., - 30 மார்க்1' போர் விமானங்கள் மேம்பாடு, பலதரப்பட்ட பணிகளுக்கு பயன்படும் ஹெலிகாப்டர்கள் வடிவமைப்பு ஒப்புதல் மற்றும் இதர பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றின் மொத்த ஆர்டர் மதிப்பு 2.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
இந்த மார்ச் மாதம் முதல் இலகுரக 'தேஜஸ் மார்க் 1ஏ' போர் விமானத்தின் வினியோகம் ஆரம்பமாகும். அடுத்த நிதியாண்டிற்குள், விமானப்படைக்கு 11 தேஜஸ் விமானங்கள் வினியோகிக்கப்படும்.
தேஜஸ் போர் விமானங்களை ஒப்படைப்பதில் நிர்வாக ரீதியில் ஏற்பட்ட தாமதம் மட்டுமே காரணமல்ல; தொழில்நுட்பக் கோளாறு கண்டறிந்து, அது சரிசெய்யப்பட்டுள்ளது. இதை, விமானப்படையின் தளபதியும் புரிந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அரசு நிறுவனங்களுடன் எங்கள் நிறுவனம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது.
தேஜஸ் போர் விமானங்களின் வடிவமைப்புகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன; விரைவில் விமானத்தின் இன்ஜின் தயாரானவுடன், அவற்றை பொருத்தி இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கும் பணி துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.