/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.டி.ஓ., சஸ்பெண்ட் தேஜஸ்வி கண்டனம்
/
பி.டி.ஓ., சஸ்பெண்ட் தேஜஸ்வி கண்டனம்
ADDED : அக் 18, 2025 11:09 PM

ராய்ச்சூர்: 'ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் பங்கேற்றதற்காக பி.டி.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டது சட்டவிரோதம்' என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கண்டித்தார்.
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூரில் கடந்த 12ம் தேதி ஆர்.எஸ்.எஸ்.,சின் நுாற்றாண்டு விழாவையொட்டி அணிவகுப்பு நடந்தது. இதில், ரோடலபன்டா பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி பிரவீன் குமார் பங்கேற்றார். இவர், லிங்கசுகூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., மானப்பா வஜ்ஜலின் ஆதரவாளர்.
இதை அறிந்த பஞ்சாயத்துத் துறை கமிஷனர் அருந்ததி, பிரவீன் குமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், 'அரசு ஊழியர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது விதிமீறலாகும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட அறிக்கை:
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பில் பங்கேற்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பி.டி.ஓ.,விடம் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். சட்ட விரோதமாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து வழக்கு தொடருவேன். அநீதிக்கு எதிராக போராட தயாராக உள்ளேன்.
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என, தீர்ப்பு அளிக்கப்பட்ட பல வழக்குகள் உள்ளன. இந்த சட்டவிரோத சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முதல்வர் சித்தராமையா சட்டப்போராட்டத்தை நடத்த விரும்பினால், நானும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

