ADDED : பிப் 04, 2025 06:50 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கோடை காலத்துக்கு முன்பே, வெப்பத்தின் தீவிரம் அதிகரிக்கிறது. மக்கள் தத்தளிக்கின்றனர். பொதுவாக பிப்ரவரியில் 25 முதல் 26 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை இருக்கும். ஆனால், இம்முறை 30 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகிறது.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வெப்பம் கிடுகிடுவென அதிகரிக்கிறது. வட மாவட்டங்களில் 32 முதல் 34 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுகிறது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில், கவனம் செலுத்தும்படி மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில் சூரிய வெப்பம் உடலில் படுவதால், உடலில் நீர்ச்சத்து குறையும். உடல் சோர்வடையும். ரத்தத்தின் அளவு குறையும். இதயத்துக்கு அழுத்தம் அதிகரிக்கலாம். சருமத்தை பாதிக்கும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறார்கள் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம்.
அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், எலுமிச்சை ரசம், பழ ரசங்கள் அருந்துவது நல்லது. பருத்தி உடைகள் அணிவது நல்லது. உடலை வெப்பம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

