/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரஷ்ய பெண், 2 குழந்தைகளை நாடு கடத்த இடைக்கால தடை
/
ரஷ்ய பெண், 2 குழந்தைகளை நாடு கடத்த இடைக்கால தடை
ADDED : ஜூலை 24, 2025 11:24 PM

பெங்களூரு: கோகர்ணா குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண், அவரது இரு குழந்தைகளை, அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவின் ராமதீர்த்த மலையில் உள்ள குகையில், கடந்த 11ம் தேதி ரஷ்ய நாட்டை சேர்ந்த நீனா குடியா, 40, அவரது மகள்கள் பிரேயா, 6, ஆமா, 4, ஆகியோரை போலீசார் மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, வேலைக்காக, 2018ல் இந்தியாவுக்கு வந்த இவர், கோவாவில் பணியாற்றி வந்தார். விசா காலம் முடிந்ததும் நேபாளம் சென்றார்.
அங்கிருந்து மீண்டும் இந்தியா வந்த அவர், தியானத்தில் ஈடுபட, கோவாவில் இருந்து கோகர்ணா ராமதீர்த்தா குகையில் தங்கினார்.
அவரையும், குழந்தைகளையும் மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்புவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ரஷ்ய பெண் நீனா குடியா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் பீனா பாட்டீல் வாதிடுகையில், ''மனுதாரரையும், அவரது இரு மகள்களையும் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைப்பதால் குழந்தைகளை பாதிப்பது மட்டுமின்றி, யு.என்.சி.ஆர்.சி., எனும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மாநாட்டின் தீர்மானத்தை மீறுவதாகும்,'' என்றார்.
அரசு தரப்பு உதவி சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத் வாதிடுகையில், ''குழந்தைகளிடம் தற்போது எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை,'' என்றார்.
நீதிபதி, 'ரஷ்ய பெண், குழந்தைகளை உடனடியாக சொந்த நாட்டுக்கு அனுப்ப இயலாது. குழந்தைகள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதை அரசு தரப்பில் எழுத்துபூர்வமாக அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் இரண்டு வாரங்களுக்குள் தங்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆக., 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றார்.