/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஹதாயி விவகாரம் கோவா முதல்வரின் பேச்சுக்கு கர்நாடகா கண்டனம்
/
மஹதாயி விவகாரம் கோவா முதல்வரின் பேச்சுக்கு கர்நாடகா கண்டனம்
மஹதாயி விவகாரம் கோவா முதல்வரின் பேச்சுக்கு கர்நாடகா கண்டனம்
மஹதாயி விவகாரம் கோவா முதல்வரின் பேச்சுக்கு கர்நாடகா கண்டனம்
ADDED : ஜூலை 24, 2025 11:24 PM

பெங்களூரு: 'மஹதாயி குடிநீர் திட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்காது' என, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதற்கு, கர்நாடக அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவாவில் உற்பத்தியாகும் மஹதாயி ஆற்றில் இருந்து, கர்நாடகாவுக்கு 13 டி.எம்.சி., தண்ணீர் பகிர்ந்தளித்து, மஹதாயி தீர்ப்பாயம், 2018ல் உத்தரவிட்டது. இந்த நீரை பயன்படுத்தி, பெலகாவி மாவட்டத்தின், பல்வேறு தாலுகாக்களுக்கு குடிநீர் வழங்க, கர்நாடகா அரசு, கலசா - பண்டூரி திட்டத்தை வகுத்தது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரியுள்ளது. ஆனால், இதற்கு கோவா அரசு தடைக்கல்லாக நிற்கிறது.
கர்நாடகாவில் பல அரசுகள் மாறியும், திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியவில்லை. மஹதாயி திட்டத்துக்கு அனுமதி அளித்தால், தங்கள் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என, கோவா காரணம் கூறுகிறது. மத்திய குழுவினரும் இதற்கு முன்பு, பெலகாவிக்கு வந்து திட்டம் செயல்படுத்தும் இடங்களை பார்வையிட்டனர். ஆனால் மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
இதற்கிடையே நேற்று முன் தினம், கோவா சட்டசபையில் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், 'மஹதாயி திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காதென, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், என்னிடம் கூறியுள்ளார்' என்றார். இதற்கு கர்நாடக அமைச்சர்கள், கன்னட அமைப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
மஹதாயி திட்டத்தில், நாம் ஒற்றுமையாக போராட வேண்டும். இது நம் தன்மான பிரச்னை. 28 எம்.பி.,க்கள் வாயை மூடி அமர்ந்திருப்பது தவறு. கர்நாடக கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மன கட்டுப்பாடு இல்லாமல் பேசுகிறார்.
மஹதாயி திட்டம் தொடர்பாக, டில்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவோம். திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுப்போம். மஹதாயி திட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அரசியல் செய்யவில்லை. ஆனால், கோவா அரசு செய்கிறது.
கோவா அரசு முட்டுக்கட்டை போட்டாலும், மஹதாயி திட்டத்தை செயல்படுத்துவோம். ஏற்கனவே டெண்டர் அழைத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், பணிகளை துவக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு தாமதம் கோவா முதல்வரின் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்கில் நடந்து கொள்கிறது. கலசா - பண்டூரி திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல், தாமதம் செய்கிறது. இதன் மூலம் கூட்டாட்சி நடைமுறையை பலவீனமாக்குகிறது. மத்திய அரசு அரசியலை ஓரங்கட்டி, திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஹெச்.கே.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர்
தேர்ந்தெடுத்தது ஏன்? தீர்ப்பாயம் நமக்கு பகிர்ந்தளித்த நீரை பயன்படுத்த, மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. கோவா அரசு ஆரம்பத்தில் இருந்தே, திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. நம் மாநில எம்.பி.,க்களும் வாய் திறப்பது இல்லை. இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது ஏன்? வேலைக்கு உதவாத விஷயங்களை பற்றி பேசும் எம்.பி.,க்கள், மாநில நீர், நிலம், மொழி, நலன் விஷயத்தில் வாயை திறப்பது இல்லை. இத்தகைய எம்.பி.,க்களுக்கு அடுத்த தேர்தலில், மக்கள் பாடம் புகட்ட வேண்டும். ராமலிங்கரெட்டி, போக்குவரத்து துறை அமைச்சர்