800 கே.பி.எஸ்., பள்ளிகள் துவங்க விரைவில் 'டெண்டர்' செயல்முறை
800 கே.பி.எஸ்., பள்ளிகள் துவங்க விரைவில் 'டெண்டர்' செயல்முறை
ADDED : மே 21, 2026 12:11 AM
பெங்களூரு: கர்நாடகாவில் 800 கே.பி.எஸ்., பள்ளிகளை திறக்க டெண்டர் செயல்முறையை விரைவில் துவங்குமாறு, பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடக அரசின் 2025 - 2026ம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலத்தில் 800 கே.பி.எஸ்., எனும் கர்நாடக பொது பள்ளி திறக்கப்படும் என, முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
பள்ளிகளை திறப்பதற்கான டெண்டர் செயல்முறை குறித்து, பள்ளி கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, துறை அதிகாரிகளுடன் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதியில் இருந்து பள்ளிகள் துவங்குகின்றன. இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். எல்.கே.ஜி., முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை கன்னடம், ஆங்கில வழியில் கல்வி வழங்க கே.பி.எஸ்., பள்ளிகள் துவங்க வேண்டும். 800 பள்ளிகளை திறக்க டெண்டர் செயல்முறையை விரைவில் துவங்க வேண்டும்.
ஜூன் 1ம் தேதி ஷிவமொக்காவில் ஒரு கே.பி.எஸ்., பள்ளி திறக்கப்படும். அந்த பள்ளியில் 1,200 குழந்தைகள் படிக்கும் வகையில் மாணவர் சேர்க்கை படிவம் வழங்கப்படும். பள்ளி பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுங்கள்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தற்காலிகமாக மாற்று ஆசிரியர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், நிலைமை முழுமையாக சீராகவில்லை. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, நிதி துறைக்கு முன்மொழிவு சமர்ப்பியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
