/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விநாயகர் சதுர்த்தி பிளக்ஸ் பேனரால் பதற்றம்
/
விநாயகர் சதுர்த்தி பிளக்ஸ் பேனரால் பதற்றம்
ADDED : ஆக 30, 2025 03:31 AM

தாவணகெரே: விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பதற்றம் ஏற்பட்டது. நேற்று காலை போலீசார் அதை மாற்றியதால், சகஜ நிலை திரும்பியது.
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தாவணகெரே மாவட்டம், மட்டிகல் பகுதியில் வீர் சாவர்க்கர் இளைஞர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா பந்தலுக்கு அருகில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, அப்சல் கானை குத்துவது போன்ற பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆர்.எம்.சி., யார்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அங்கு வந்த போலீசார், பிளக்ஸ் பேனரை அகற்ற முற்பட்டனர். இதற்கு இளைஞர்கள், 'நாட்டின் வரலாறு, இன்றைய சமுதாயத்திற்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த பேனர் வைத்துள்ளோம்.
'நாங்கள் எந்த வகுப்புவாதத்தையும் துாண்ட மாட்டோம். மாவட்டத்தில் உள்ள திப்பு சுல்தான், அவுரங்கசீப் பிளக்ஸ் பேனர்களை அகற்றும் வரையில், எங்கள் பேனர்களை அகற்ற மாட்டோம்' என்றனர்.
அதையும் மீறி பேனரை அகற்ற போலீசார் முற்பட்டனர். அப்போது, அவர்களுக்கும், ஹிந்து அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேனரை அகற்றுவதற்கு நேற்று காலை 10:30 மணி வரை போலீசார் கெடு விதித்திருந்தனர்.
அதுவரை முன்னெச்சரிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை போலீசார் மீண்டும் பேச்சு நடத்தினர். அப்போது, பிளக்ஸ் பேனர்களை அகற்ற வீர் சாவர்க்கர் இளைஞர் சங்கத்தினர் சம்மதித்தனர்.
இதையடுத்து, பழைய பேனர் அகற்றப்பட்டு, புதிதாக சத்ரபதி சிவாஜி இருக்கும் மெகாசைஸ் பேனர் வைக்கப்பட்டது. இதனால் கிராம மக்களும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர்.
தாவணகெரேயில் மட்டிகல் மற்றும் பெட்டூரு சாலை மிகவும் பதற்றமான பகுதியாக அறியப்படுகிறது. கடந்தாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, சமூக விரோதிகள் கற்களை வீசினர்.
அத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காத வகையில் போலீசார் நடந்து கொண்டதை, பொது மக்கள் வரவேற்றனர்.
30_DMR_0004, 30_DMR_0005
ஆட்சேபனைக்குரிய வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர். (அடுத்த படம்) புதிதாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்.