ADDED : ஜூலை 01, 2026 11:25 PM

தாவணகெரே: பயங்கரவாதி சுஹேலின் போலீஸ் காவல், நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூரை சேர்ந்த பயங்கரவாதி சுஹேல், 20, கர்நாடகாவின் தாவணகெரேயின் ஹரிஹராவில், 22ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், அவரை தங்கள் காவலில் எடுத்தனர்.
ஹரிஹரா ரூரல் போலீஸ் நிலையத்தில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதி திட்டம் தீட்டியதை ஒப்பு கொண்டார்.
சுஹேலிடம், என்.ஐ.ஏ., மற்றும் பயங்கரவாத தடுப்பு படை அமைப்பினரும், விசாரணை நடத்தி தகவல் சேகரித்தனர். இந்நிலையில், சுஹேலின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஹரிஹரா ஜே.எம்.சி., நீதிமன்றத்தில் நீதிபதி பீரப்பா காம்ப்ளே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்கவில்லை. இதனால், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, தாவணகெரே மாவட்ட மத்திய சிறையில் சுஹேலை அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேனில் அழைத்து வரப்பட்ட போது, தன்னை படம் எடுத்த ஊடகத்தினரை நோக்கி, 'உஷார்' என்று எச்சரிக்கும் வகையில், சுஹேல் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
