'டே கேர்' மையத்தில் குழந்தைகளை துன்புறுத்திய 5 ஊழியர்கள் மீது வழக்கு
'டே கேர்' மையத்தில் குழந்தைகளை துன்புறுத்திய 5 ஊழியர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 01, 2026 11:25 PM
எச்.ஏ.எல்.: 'டே கேர்' மையத்தில் விடப்பட்ட குழந்தைகளை துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில், ஐந்து பெண் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரின் எச்.ஏ.எல்., அருகே புரூக்பீல்டு பகுதியில், பிரபல ஐ.டி., நிறுவனத்தின் வளாகத்தில், டே கேர் எனும் குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளது.
ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் குழந்தைகளை, இந்த மையத்தில் விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த மையத்தில் பராமரிக்கப்படும் 2 முதல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பெற்றோரை தேடி அழும் போது, மையத்தில் உள்ள வாஷிங்மெஷினில் அடைத்து வைப்பது; கழிப்பறை கோப்பை மீது அமர வைத்து தண்ணீரை பீய்ச்சி அடிப்பது; கழிப்பறைக்குள் அடைப்பது என கொடூரமாக செயல்களை, அங்கு வேலை செய்த மஞ்சுளா, விஜயலட்சுமி, சிந்து, பவானி, பிந்து ஆகிய, ஐந்து பெண் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
இதை அங்கு வேலை செய்யும் யாரோ ஒருவர் மொபைல் போனில் வீடியோ எடுத்து, 'வாட்ஸாப்' குழுக்களில் பரவ விட்டனர்.
வீடியோக்கள் பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்து அவர்கள் மூலம், எச்.ஏ.எல்., போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின்படி, ஐந்து பெண் ஊழியர்கள் மீதும் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
